திருப்பூர், பிப்.13-
வெள்ளகோயில் செவிலியர் மணிமாலா கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பெரிய கரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் மணிமாலா. இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். மருத்துவமனை குடியிருப்பில் வசித்துவந்த இவர் கடந்த சனியன்று இரவு தனது அறையில் தூக்கிவிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வெள்ளகோவில்காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மணிமாலாவின் மரணத்திற்கு மருத்துவ அலுவலர் தமயந்தி மற்றும் உதவி மருத்துவ அலுவலர் சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவருக்கும் இடையே உள்ளஅதிகார போட்டியே காரணம் என கூறப்படுகிறது. ஆகவே, சமந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் பிரேதத்தை வாங்க மறுத்து காங்கேயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்றாம் நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் தாராபுரம் பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர் லியாகத் ஆகியோர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.

தந்தை புகார்:
இந்நிலையில் மணிமாலாவின் தந்தை கு,ராமலிங்கம் கூறியதாவது; எங்கள் சொத்தை விற்று மகளை படிக்க வைத்தோம். படித்து திருப்பூருக்கு வேலைக்கு வந்த மணிமாலாவை அந்தஇரண்டு மருத்துவர்களும் திட்டி, கம்பியை வைத்து இருக்கி கொன்றுவிட்டார்கள். சனியன்று மாலை எனதுமகள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, அந்த தமயந்தி மற்றும் சக்தி அகிலாண்டீஸ்வரி ஆகிய இருவம் என்னை அதிகமாக தொந்தரவு செய்கிறார்கள். அதனால் எனக்கு அதிகமாக மன உளைச்சலாகிறது எனதெரிவித்தார். இதன்பின்னரே அவர் உயிரிழந்தார். மேலும் எங்களை கேட்காமல் பிரேதபரிசோதனைசெய்துள்ளனர். எனது மகளுக்கு நடந்தது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. ஆகவே, எனது மகளை தொந்தரவு செய்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காவல் துறை விசாரணை:
இதற்கிடையே, செவிலியர் மணிமாலா மரணம் தொடர்பாக வெள்ளகோவில் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மணிமாலாவுடன் மருத்துவமனை குடியிருப்பில் தங்கியிருந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்:
செவிலியர் மணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாநில துணை தலைவர் ஜீ.சாவித்திரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.மைதிலி, மாவட்ட செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பானுமதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி முறையீடு:
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் முத்துக்கண்ணன், மாநிலகுழு உறுப்பினர் காமராஜ், சிஐடியு மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன், மாவட்டசெயலாளர் ரங்கராஜ் ஆகியோர் செவ்வாயன்று காங்கேயம் மருத்துவமனைக்கு சென்று செவிலியர் மணிமாலாவின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதன்பின் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியினர், செவிலியர் மணிமாலா மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிபடுத்த வேண்டும். அவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மணிமாலாவின் மரணத்திற்கு காரணமான மருத்துவர்கள் தமயந்தி, சக்தி அகிலாண்டேஸ்வரி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.