தூத்துக்குடி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பிப்.17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது. மாநாட்டின் நோக்கங்களை விளக்கி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் கலைக் குழுக்களின் பிரச்சாரப் பயணம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது.

இந்தப் பிரச்சாரத்தில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், இவற்றில் மத்திய-மாநில அரசுகளின் பங்கு, பொங்கியெழும் மக்கள் போராட்டங்கள், அவற்றிற்கான தீர்வு ஆகியவற்றை மையப்படுத்தி பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது. ‘பெரியாரின் நாடா? இது பரிவாரின் வீடா?‘, என கேள்வி எழுப்பும் பாடல் வரிகளுக்கும் அதைத் தொடர்ந்து வரும் ‘கல்லாக் கட்டும் மந்திரி எல்லாம் கவர்னர் விருந்தில் முந்திரி‘, என ஆளும் கட்சியின் அவலங்களைத் தோலுரிக்கும் வரிகளுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்புள்ளது.
மீனவர் துயரத்தைச் சொல்லி, அதில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் பாடல் உள்ளிட்ட ஆறு பாடல்களை மாநில மாநாட்டிற்காக கவிஞர் நவகவி வடித்துக் கொடுத்துள்ளார். அவற்றை கலைக்குழுவினர் மக்கள் மத்தியில் பாடி மாநாட்டிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

புதுகை பூபாளம், தூத்துக்குடி முத்துச்சிப்பி, பாரதி, சிவகங்கை செம்மலர் கலைக்குழுக்கள் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நையாண்டி, பாடல்கள், நாடகம், பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலை வடிவங்களால் மக்களை ஈர்த்து வருகின்றனர்.

கடந்த 11-ஆம் தேதி கோவில்பட்டியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.மல்லிகாவும், தூத்துக்குடியில் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.அர்ச்சுனன், பேச்சிமுத்து ஆகியோரும் கலைப்பயணங்களை துவக்கி வைத்தனர். 25-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இக்கலைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி புறநகர் பகுதிகளான பழையகாயல், முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி உள்ளிட்ட பகுதிகளில் புதுகை பூபாளம், தூத்துக்குடி முத்துச்சிப்பி, பாரதி கலைகுழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இந்த நிகழ்ச்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கு.ரவீந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பூமயில், சீனிவாசன், ராமசுப்பு, அப்பாகுட்டி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செம்மலர் கலைக்குழுவினர் கோவில்பட்டி பேருந்து நிலையம், பாலாஜி நகர், புதுக்கிராமம், வடக்கு திட்டங்குளம், கிளவிப்பட்டி, மணியாச்சி, நாலாட்டின்புதூர், கழுகுமலை, கயத்தார், கடம்பூர், பசுவந்தனை, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கலைக்குழுக்களின் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொடியேற்றம்
தூத்துக்குடி ஒன்றியம் தாளமுத்துநகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநில மாநாட்டை முன்னிட்டு 22 கொடி ஏற்றும் நிகழ்ச்சி சோட்டையான் தோப்பு பகுதியில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சண்முகராஜ், ஒன்றியச் செயலாளர் கே.சங்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம். ஞானதுரை, சி.ராமகிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் எஸ்.அய்யப்பன், ஏ.வி. அண்ணாதுரை, முத்துசிற்பி தாமோதரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: