திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூரில் சிகால் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிய வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு நிர்வாகம் மிகவும் குறைந்த கூலியை வழங்கி வந்தது. பலமுறை கோரிக்கைகளை வைத்த பிறகும் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் உரிமைகளை முறையாக நிர்வாகத்திடம் வலியுறுத்தினர் .உரிமைகளைக் கேட்டதற்காக பழிவாங்கும் நோக்கில் 29 தொழிலாளர்களை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.இந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி கடந்த 6 மாதங்களாக சிஐடியு தலைமையில் வல்லூர், மேலூர்,புங்கம்பேடு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் போராடி வந்தனர். பொன்னேரி கோட்டாச்சியர் முன்னிலையில் பல கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.நிர்வாகம் பணியவில்லை.
இந்நிலையில் பிப். 5 முதல் சிகால் தொழிற்சாலை முன்பு பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கிராம மக்களின் பங்கேற்புடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். பிப்.13 அன்று ஆலையின் நுழைவு வாயில் முன்பு ஏராளமான தொழிலாளர்கள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டதால் நிர்வாகம் அசைந்தது.இதனைத் தொடர்ந்து பொன்னேரி கோட்டாச்சியர் முத்துச்சாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் தலையிட்டு பேச்சு நடத்தினர்.
அப்போது வரும் பிப்.22 அன்று சென்னையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் பிரச்சினையை பேசி ஒரு முடிவிற்கு வரலாம் என நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 9 நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் கே.ராஜந்திரன், பொருளாளர் ஆர்.பூபாலன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.துளசிநாராயணன், சிஐடியு துணை நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, நரேஷ்குமார்,இ.nஜயவேலு, சலில்குமார், கதிர்வேலு, காஞ்சனா, சதீஷ் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.