பூந்தமல்லி,
குன்றத்தூரை அடுத்த இரண்டாம்கட்டளை ராகவேந்திரா நகர் கம்பர் தெருவில் வசிப்பவர் அசோக்குமார். இவரது மனைவி ஜெயசிறீ (57). கடந்த 10ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த வாலிபர் திடீரென ஜெயசிறீ அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு ஓடினான்.
இதில் ஜெயசிறீ கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக்குமார் கொள்ளையனை விரட்டிச் சென்றார். ஆனால் அவன் சிறிது தூரத்தில் மோட்டார் பைக்கில் தயாராக இருந்த கூட்டாளியுடன் தப்பிச் சென்று விட்டான். இந்தக் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் அசோக்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு, அங்குப் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சிவா (19), அவனது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் (23) என்பது தெரிய வந்தது.
நகை பறிப்பில் ஈடுபட்ட காட்சி பத்திரிகை மற்றும் டி.வி.க்களில் வெளியானதையடுத்து இருவரும் புதுச்சேரி, வில்லியனூரில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் சிவாவை கைது செய்தனர். கூட்டாளி சாலமன் தலைமறைவாகி விட்டான். அவனைக் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.