====கே.பாலகிருஷ்ணன்====                                                                                                                    (கட்டுரையாளர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்)
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் மீதான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அடுத்த சில நாட்களில் வெளியிட உள்ளது. அண்டை மாநிலங்களாக உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களுக்கிடையே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் பிரச்சனையாகும் இது. இக்காலத்தில் உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம், நாடாளுமன்றத்தின் இரு அவைகள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்றங்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரதமர், மற்ற மத்திய அமைச்சர்கள், மத்திய நீர்வள ஆணையத்தின் அதிகாரிகள் என பல மட்டங்களில் ஆண்டுக்கணக்கில் விவாதிக்கப்பட்ட பிரச்சனையும் இதுவே.
பலகட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மத்திய அரசு நடுவர்மன்றத்தை அமைத்தது. இறுதி தீர்ப்பு வரும் வரையில் செயல்படுத்தும் வகையில் இடைக்கால தீர்ப்பு வழங்கிட வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு அடிப்படையில் நடுவர்மன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது. அந்த உத்தரவை அரசிதழில் வெளியிட மத்திய அரசு மறுத்தபோது மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி அரசிதழில் இடைக்கால உத்தரவு வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்த ஒரு நிர்வாக அமைப்பு ஏற்படுத்த வேண்டுமென்ற பன்மாநில நதிநீர் தாவா சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையில் பல ஆண்டுகள் சட்ட போராட்டத்துக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு பின்னர் 4 மாநில முதலமைச்சர்களை உறுப்பினர்களாகவும், பிரதமரை தலைவராகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையமும், கண்காணிப்புக் குழுவும் உருவாக்கப்பட்டது.கருகும் பயிர்களை காப்பாற்றிட தண்ணீர் திறந்துவிட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் போட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், பெறப்பட்ட வாய்தாக்கள், பிறப்பித்த உத்தரவுகள் ஏராளம், ஏராளம். 
இவ்வளவுக்குப் பின்னரும் இப்போதும் காவிரிப் பிரச்சனை துவங்கிய இடத்திலேயே உள்ளது. நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்தபோதும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 81 டிஎம்சி தண்ணீரை வழங்காத காரணத்தால் சுமார் 4 லட்சம் ஏக்கரில் சாகுபடிகள் காய்ந்து கருகி வருகின்றன. 7 டிஎம்சி தண்ணீரையாவது திறந்துவிடுங்கள் என்ற தமிழக அரசின் கோரிக்கையினை கர்நாடகம் செவிமடுக்கவில்லை. நமது அரசியல் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து நிர்வாக அமைப்புகளின் உத்தரவுகளையும் கர்நாடக அரசு பொருட்படுத்தவில்லை. மத்திய அரசும் மாநிலங்களுக்கு இடையிலான இப்பிரச்சனையில் சட்டரீதியாக தாம் ஆற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றவில்லை. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாடு தனது பாரம்பரிய உரிமையை இழந்து தவிக்கிறது.
நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு
இந்நிலையில் சுமார் 16 ஆண்டுகள் விசாரணை நடத்திய காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பினை 5.2.2007 அன்று வெளியிட்டது. அத்தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கான தண்ணீர் அளவு மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான நிர்வாக அமைப்பு உள்ளிட்டவைகளை விளக்கி விரிவான உத்தரவு வழங்கியது. இத்தீர்ப்பின் மீது சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தங்களது குறைகளை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களாக தாக்கல் செய்துள்ளன. இம்மேல் முறையீட்டு மனுவினைத் தொடர்ந்து காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைத்திட மத்திய அரசுக்கும், ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் வழங்க மறுத்ததால் ஏற்பட்ட சாகுபடி இழப்புக்கு ரூ.2480 கோடி இழப்பீடு வழங்கிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுக்களையும் தமிழக அரசு பதிவு செய்துள்ளது.
அனைத்து வழக்குகளையும் இணைத்து உச்சநீதிமன்றம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது விசாரணையை துவக்கியபோது, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கே அதிகாரமில்லை என மத்திய அரசு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது. மத்திய அரசின் இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துவிட்டு, ஒருவழியாக காவிரி தொடர்பான அனைத்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து நடத்தி முடித்து தற்போது தீர்ப்புக்காக ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே மாநிலங்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகள் மீது உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பு வழங்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
தண்ணீர் பகிர்வு
காவிரி தாவாவில் சம்மந்தப்பட்டுள்ள மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் சாகுபடி பரப்பு, அதற்கு தேவைப்படும் தண்ணீர் மற்றும் குடிநீர் தேவைகளைக் கணக்கிட்டு நடுவர் மன்றதின் முன்பு கோரிக்கை மனுக்களை விபரமாக சமர்ப்பித்துள்ளன. இதன்படி தமிழ்நாடு 562 டி.எம்.சி., கர்நாடகம் 365 டி.எம்.சி. கேரளா 99 டி.எம்.சி., புதுச்சேரி 99 டி.எம்.சி என மொத்தம் 1125 டி.எம்.சி. தண்ணீருக்கான கோரிக்கையை முன் வைத்தன. ஆனால் காவிரிப்படுகையில் இருக்கும் மொத்த சராசரி தண்ணீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டது. எனவே மாநிலத்தின் கோரிக்கை அடிப்படையில் 740 டி.எம்.சி., தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதே நடுவர்மன்றத்தின் முன்பு முக்கியமான பணியாக இருந்தது. இதர நதிநீர் தாவாக்கள் உபரி நீரை பகிர்ந்து கொள்வது என்பதற்கு மாறாக, காவிரி தாவா பற்றாக்குறையை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதாக உள்ளது.
இதனடிப்படையில் தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி., கேரளம் 30 டி.எம்.சி., புதுச்சேரி 7 டி.எம்.சி, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு 10 டி.எம்.சி, தவிர்க்க முடியாமல் கடலுக்கு செல்வது 4 டி.எம்.சி என கணக்கிட்டு தனது இறுதி உத்தரவாக வெளியிட்டது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 419 டி.எம்.சியில் தமிழக நீர்பிடிப்பு பகுதியில் கிடைக்கும் 327 டி.எம்.சி தண்ணீரை கழித்து மீதம் 192 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த 192 டி.எம்.சி தண்ணீர் வழங்குவதற்கான மாதாந்திர விகிதாச்சாரத்தையும் நடுவர்மன்றம் வெளியிட்டது.
இவ்வாறு தண்ணீரை பகிர்ந்தளித்த நடுவர்மன்றம் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கு நியாயமாக வழங்க வேண்டிய தண்ணீர் வழங்க மறுத்துவிட்டது. அதாவது ஏற்கனவே பாசனம் பெற்றுக் கொண்டிருந்த சுமார் 4,56,130 ஏக்கருக்கு தண்ணீர் வழங்க மறுத்துவிட்டது. இதில் சுமார் 2,66,000 ஏக்கர் நிலம் 1000 ஆண்டுகளுக்கு மேல் காவிரி நீர் பெற்றுவந்த பகுதியாகும். காவிரி டெல்டா மேட்டூர் திட்டத்தில் 3.2 லட்சம் ஏக்கருக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் மறுக்கப்பட்டுள்ளது. வேறு படுகைக்கு தண்ணீர் எடுத்து செல்லக்கூடாது என்ற அடிப்படையில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்துக்கு 1906ம் ஆண்டு முதல் வழங்கி வந்த தண்ணீர் மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக கர்நாடகத்துக்கு கூடுதல் சாகுபடி பரப்பும், கூடுதல் தண்ணீரும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கெனவே பாசனம் பெற்று வந்த மேற்கண்ட பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் ஒதுக்க வேண்டுமென தமிழகம் கோரியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்கும் தண்ணீர் எங்கு அளவிட்டு வழங்குவது என்பது அடுத்த பிரச்சனை. இரு மாநில எல்லையில் மத்திய நீர்வள ஆணையத்தின் கட்டுப்பாட்டில உள்ள பில்லிகுண்டுலுவில் கர்நாடகம் 192 டி.எம்.சி வழங்கிட வேண்டுமென நடுவர் மன்றம் உத்தரவிட்டது. ஆனால் மேட்டூர் அளவீட்டு மையத்துக்கும், பில்லிகுண்டுலு மையத்துக்கும் தண்ணீர் அளவிடுவதில் பெரும் வேறுபாடு உள்ளதால் பில்லிகுண்டுலுவில் நவீன அளவீட்டு மையம் அமைத்து அதில் கணக்கிட வேண்டுமென தமிழகம் கோரியுள்ளது.
பற்றாக்குறை பகிர்வு
காவிரி நீர் தாவா ஏற்பட்ட காலத்திலிருந்தே பற்றாக்குறை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது முக்கிய பிரச்சனையாக இருந்து வந்தது. இப்பிரச்சனையில் நடுவர்மன்ற இறுதி உத்தரவும் குழப்பமாகவே அமைந்தது. நடுவர் மன்றம் மாநிலங்களுக்கு கிடைக்கும் மொத்த நீரில் தமிழ்நாட்டுக்கு 57.7 சதமானம் (419 டி.எம்.சி), கர்நாடகம் 37.2 சதமானம் (270 டி.எம்.சி), கேரளா 4 சதமானம் (30 டி.எம்.சி), புதுச்சேரி 1.0 சதம் (7 டி.எம்.சி) என்ற சதவீத அடிப்படையில் பற்றாக்குறை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் அளவை பகிர்ந்து கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது. அதாவது பற்றாக்குறை காலங்களில் கிடைக்கும் குறைவான நீர்அளவுக்கு இந்த அடிப்படையில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இறுதி ஆணையின் உள்ளடக்கமாகும்.
ஆனால் இவ்வாறு மாநிலங்களிடையில் தண்ணீரை குறைத்துக் கொள்வதில் நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளதை நடுவர்மன்றம் கணக்கில் கொள்ளவில்லை. மழை அளவில் மாதாமாதம் கணக்கிட்டு அதற்கு ஏற்ப பகிர்ந்து கொள்வது நடைமுறை சாத்தியமற்றதாகும். உதாரணமாக பருவ கால தொடக்கத்தில் மழை குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். அதேபோன்று பருவ காலங்கள் முடிவில் குறைவோ, அதிகமோ ஏற்படலாம். எனவே அதிக மழை பெய்யும்போது அதை கணக்கில் கொண்டு தண்ணீரை பகிர்ந்து கொண்டால் பின்னர் மழை அளவு குறையும் போது சிக்கல் ஏற்பட வாய்ப்ப்புண்டு. இதேபோன்று எதிர்மறை காலங்களிலும் சிக்கல் ஏற்படும். இதற்கான சரியான வழியை நடுவர்மன்றம் கூறவில்லை என்பது மாநிலங்களுக்கிடையில் சிக்கலான பிரச்சனையாக நீடித்து வருகிறது. எனவே பற்றாக்குறை காலங்களில் முறையாக தண்ணீரை பகிர்ந்து கொள்வதற்கான தெளிவான கோட்பாடுகள் உருவாக்கிட வேண்டுமென்பது தமிழ்நாட்டின் கோரிக்கையாகும்.
ஆணையமும், அதன் அதிகாரமும்
உச்சநீதிமன்றத்திடம் தமிழகம் வற்புறுத்தியுள்ள மிகவும் முக்கியமான கோரிக்கை இறுதி உத்தரவை செயல்படுத்துவதற்கான நிர்வாக அமைப்பும் அதன் அதிகாரங்கள் சம்பந்தப்பட்டதாகும். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பில் காவிரி மேம்பாட்டு ஆணையமும், அதற்கு உதவி செய்திட காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்கு மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்த நிர்வாக அமைப்பை உருவாக்க மறுப்பதன் மூலம் நடுவர்மன்ற தீர்ப்பை கிடப்பிலேயே போட்டு விட வேண்டுமென்பதே மத்திய அரசின் திட்டமாக உள்ளது.
இனியும் மத்திய அரசு மேம்பாட்டு ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் ஏற்படுத்துவதை தள்ளிப் போடாத வகையிலான உறுதியான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
அடுத்து அமைக்கப்பட உள்ள ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுவின் அதிகாரங்கள் சம்பந்தப்பட்டதாகும். நடுவர்மன்ற தீர்ப்பில் இவைகள் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்ற குறையுள்ளது. “நீர்தேக்கங்களை நிர்வகிப்பது மற்றும் செயல்படுத்துவது அந்தந்த மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருந்தால் மேம்பாட்டு ஆணையம் உத்தரவுப்படி உரிய தண்ணீர் திறந்துவிடுவதை உறுதி செய்வது இயலாததாகிவிடும். எனவே சம்மந்தப்பட்ட மாநிலங்கள் உத்தரவுப்படி தண்ணீரை திறந்துவிட மறுத்தால் ஆணையம் நீர் தேக்கங்களின் கதவுகளை தானே இயக்குவதற்கான அதிகாரம் வழங்கிட வேண்டும். மேலும் தண்ணீர் அளிக்க மறுப்பதால் பாதிக்கப்படும் மாநிலத்திற்கு ஏற்படும் இழப்புகளை ஆணையமே கணக்கிட்டு சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கான மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தர அதிகாரம் வழங்கிட வேண்டும்” எனவும் உச்சநீதிமன்றத்திடம் தமிழக அரசு அழுத்தமாகக் கோரியுள்ளது.
அதேபோல கடந்த ஆண்டுகளில் கர்நாடக அரசின் பிடிவாதத்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட சாகுபடி இழப்புக்கு ரூ.2480 கோடி வழங்கிட உத்தரவிட வேண்டுமென கோரிய மனுவும் விசாரணையில் உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த வகையில் அமையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக தீர்ப்பை ஏற்று அமலாக்குவதில் நடுவர் மன்றத்தின் இடைக் கால மற்றும் இறுதி தீர்ப்புக்கு ஏற்பட்ட நிலைமை, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்பட்டு விடுமா? தீர்ப்பை ஏற்று அமல்படுத்துவதற்கு கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எத்தகைய நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் உருவாக்கப் போகிறது என்பது விடை காண வேண்டிய வினாவாக உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.