கோவை, பிப். 13-
திருட்டு வழக்கில் கைதாகி காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென உண்மை கண்டறியும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்த ஹசன் என்பவரின் மகன் சாகுல் அமீது (19) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் (15) ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் கடந்த ஜன. 22ம் தேதி மேட்டுப்பாளையம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் காவலில் இருந்த சாகுல் அமீது கடந்த ஜன.27ம் தேதி சந்தேகத்திடமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பியூசிஎல் அமைப்பின் இணை செயலாளர் பொன் சந்திரன், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் மாநில இணை தலைவர் இப்ராகிம் பாதுஷா, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா கோவை வடக்கு மாவட்ட தலைவர் காஜாமைதீன் உட்பட 9 பேர் அடங்கிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இளைஞரின் மரணம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர்களை சந்திப்பில் உண்மை கண்டறியும் குழுவினர் கூறுகையில், திருட்டு வழக்கில் பிடிப்பட்ட சாகுல் அமீதை, காவல்துறையல் கண்மூடித்தனமாக தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார். இதை மறைக்கும் நடவடிக்கையில் தற்போது காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, அவரின் மரணத்திற்கு காரணமான மேட்டுப்பாளையம் காவல்துறை உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்களை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை குற்றவியல் நடைமுறை சட்டம் 176 (1ஏ) கீழ் தனியாக எப்ஐஆர் பதிவுசெய்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும். சாகுல்அமீதின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: