====எஸ் வி வேணுகோபாலன்=====
காதலுக்காக எழுதப்படுவதைக் காட்டிலும்
எதிர்ப்பாளர்களுக்காக
அதிக புழக்கத்திற்கு வந்துவிட்டது காதல் !
அன்பு நதியின் கரையில்
ஆர்ப்பாட்டமின்றி மலரும் காதல்
எதிர்ப்பு நெருப்பில்
பொலிகிறது பொன்னைப்போல்!
எரித்து அழித்துக் கரைத்துக்
கொக்கரிப்பவர் எதிரில்
மீண்டும்
முளைத்துத் தழைத்து முறுவலிக்கிறது காதல்!
உயிர் இயற்கையின் இயக்க விதியைத்
திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கும் காதல்
பற்றிப் படர்கிறது பிடிவாதக் குழந்தையாக !
சீண்டப் போனால் தூண்டப் படும் காதல்
மீண்டும் மீண்டும் துளிர்த்துக் கொண்டே இருக்கிறது!
யாரிடத்தும் சொல்ல மறுத்தும்
யாரேனும் வந்து கேட்கட்டும் என்றும்
யார்யாருக்கெல்லாம் தெரியுமோ என்றும்
யாரும் என்னவும் சொல்லட்டும் என்றும்
போய்க்கொண்டே இருக்கிறது காதல் !
தடுக்கத் தடுக்கத் தீவிரமாகவும்
ஒடுக்க ஒடுக்கத் தீர்மானமாகவும்
பரவிக்கொண்டே இருக்கிறது காதல் !
தினத்தன்றைக்கு மட்டும் தெருவில் இறங்கி
மிரட்டுவோர்க்கு எதிராகக்
காலமுழுக்க நழுவி
நடைபோட்டுக் கொண்டே இருக்கிறது காதல் !
காதலை காயப்படுத்தும் காலிகள் அறிவார்களாக,
உங்கள்பால் இரக்கம் கொள்ளும் காதல் !
காதலைப் பிடுங்கி எரியும் திருப்பணிக்கார்கள் தெளிவார்களாக,
உங்களையும் ஆற்றுப்படுத்தும் காதல் !
பண்பாட்டுக் காவலர்கள் ஞானம் பெறுவார்களாக,
உங்கள் கொடியசைப்புக்குக் காத்திருக்கும் ரயில் அல்ல காதல்,
காதல் ஒரு சூறாவளி, ஆழிப்பேரலை, எரிமலை
மட்டுமல்ல –
ஓசை எழுப்பாத மென்சிறகின் வருடல்.!
வெறுப்போரையும் தன்னைச் சுற்றி ஈர்க்கும்
காதலின் ஆசி
குளிர்விக்கட்டும் ஒவ்வாமை வெம்மையை!
இளகச் செய்யட்டும் இறுக்கமாகிப் போன உணர்வுகளை!
வெதுவெதுப்பாக்கட்டும் நனைந்த உள்ளங்களை!
காதல், காதலிக்கட்டும் மானுடத்தை
மனிதர்கள் நேசிக்கட்டும் காதலை!
**************

Leave a Reply

You must be logged in to post a comment.