கவிஞர் சச்சிதானந்தன்    (தமிழில் : கவிஞர் சிற்பி)

அவளைக் கல்லினுள்ளிருந்து
உயிர்ப்பிப்பது என்று பொருள்
அடி முதல் முடிவரை காதலால் நீவி
சாபமேற்று உறைந்து போன ரத்தத்தில்
கனவுகளின் சூடேற்றுவது என்று பொருள்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
கரியும் எண்ணெய்ப் பிசுக்கும் கலந்த அவளது பகலை
சொர்க்கத்து மகரந்தம் சுவாசிக்கின்ற
வானம்பாடியாக மாற்றுவது
இரவில் அத்தளர்ந்த சிறகுகளுக்கு
ஓய்வு தர
தோள் குனிந்து கொடுக்கும்
தளிர் அடர் மரமாக மாறுவதாகும்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
காற்றும் மழையும் நிறைந்த கடலில்
மேகங்களின் கீழே புதியதோர் பூமியைத் தேடி
காலம் செலுத்துதல் என்று பொருள்
நமக்குச் சொந்தமான வீட்டு வாசலில்
முளைத்த ஒரு மலர்ச்செடியை
யாரும் இதுவரை கண்டிராத கடற்கரையில் கொண்டுபோய்
நட்டு வளர்த்தல் என்று பொருள்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
தன் தசைநார்களின் ஆற்றல் முழுவதையும்
ஒரு சௌகந்திகப் பூவின் மென்மைக்குக்
கைமாற்றம் செய்து கொள்வதாகும்
மணிமுடியும் ராணுவ உடையும் கழற்றியெறிந்து
மற்றொரு வானம் கடந்து
மற்றொரு வீட்டிலுள்ள
காற்றிற்கும், மற்றொரு நீருக்கும்
தன் தசையை விட்டுக் கொடுப்பதாகும்

ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால்
அவளுடைய பழமையான காயங்களிலிருந்து
சூரிய கிரணம் போல் ஒரு வாளை உருவாக்க அவளுக்கு உதவுவதாகும்
பின்னர் இரத்தம் வடிந்து தீரும் வரை
அக்காயத்தில் நம் இதயத்தை அழுத்திக் கிடப்பதாகும்

நான் ஒரு பெண்ணைக் காதலித்ததில்லை.
நன்றி: மங்கை அரசு

Leave A Reply

%d bloggers like this: