====நா காவியன்===

எனைநோக்கி ஈரடிகள் நீ நடந்தால்…
உனைநோக்கி ஓடோடி நான்வருவேன்…

உன்பார்வை எனைப்பார்த்துச் சிறகடித்தால்…
நீபோகும் பாதையெல்லாம் பார்த்திருப்பேன்…

உன்சிரிப்பு எனக்காக இதழ்விரித்தால்…
உனையேந்தி இதயத்தில் துடிதுடிப்பேன்…

ஒருராகம் எனையெண்ணி நீ இசைத்தால்…
ஓராயிரம் பாடல்கள் பண்ணமைப்பேன்…

ஒருகடிதம் எனக்குநீ எழுதிவிட்டால்…
ஒருநூறு காவியங்கள் படைத்திடுவேன்…

உன்கையை என்கையில் இணைத்துவிட்டால்
உடல், பொருள் யாவையுமே உனக்களிப்பேன்…

ஒருமுத்தம் எனக்குநீ அமுதளித்தால்…
உயிர்மூச்சை உனக்காக அர்ப்பணிப்பேன்…

காதலென்று என்னைநீ அணைத்துவிட்டால்…
காலமெல்லாம் உன்மடியில் கரைந்திடுவேன்…

‘மணம்’என்று உன்வாசல் திறந்துவைத்தால்…
மரணத்தை யுகமெல்லாம் வென்றிடுவேன்…

ஒருவேளை என்னைநீ மறுதலித்தால்…
உன்னிடமே மீண்டும்நான் உயிர்த்தெழுவேன்.

Leave A Reply

%d bloggers like this: