பூந்தமல்லி மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு தனது கூட்டாளிகள் 100 பேருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அந்த இடத்தைச் சுற்றி வளைத்த காவல் துறையினர் 75 ரவுடிகளை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள், கார், மோட்டார் பைக்குக்கள், ஆட்டோக்கள், 50க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

ஆனாலும் காவல் துறையிடம் சிக்காமல் ரவுடி பினு மற்றும் சில ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். கடந்த ஒரு வாரமாகத் தலைமறைவாக இருந்த பினுவை தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தனர். காவல் துறையிடம் சிக்காமல் இருப்பதற்காக காரிலேயே வலம் வந்ததாகவும், கைப்பேசி கூட பயன்படுத்தாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பினுவையும் தப்பி ஓடிய அவனது கூட்டாளிகளையும் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவுடி பினு செவ்வாய்க்கிழமை (பிப்.13) திடீரென அம்பத்தூர் காவல் மண்டலத்திற்குட்பட்ட துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் முன்பு சரணடைந்தான். பின்னர் வழக்கு மாங்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால், மாங்காடு காவல் உதவி ஆணையர் கண்ணனிடம் பினுவை ஒப்படைத்தனர். அங்கு அவனிடம் இத்தனை நாட்கள் பதுங்கி இருந்தது எங்கே, அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் யார். யாரைக் கொலை செய்ய அங்கே கூடி திட்டம் தீட்டப்பட்டது, அரசியல் பின்னணி என்ன என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் பினுவை திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிறகு பினுவை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். பினு மீது சூளைமேடு, வடபழனி, பூந்தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: