ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்டது வரட்டுப்பள்ளம் அணை. இவ்வணையில் அந்தியூரைச் சேர்ந்த சுமார் 300 பெஸ்தவர் மீனவர் குடும்பங்கள் காலம் காலமாக மீன்பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் என்ற அமைப்பையும் இம்மீனவர்கள் அமைத்து மீன்பிடிக்கும் குத்தகையை அரசின் மீன்வளத்துறைக்கு முறையாக செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இவ்வணையில் மீன்பிடிக்கும் குத்தகையை தமிழக அரசு தனியாருக்கு ஒப்பந்தம் விட்டதன் விளைவாக மீனவர் குடும்பங்கள் மீன்பிடி தொழில் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகின. எனவே, வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமை தனியார் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்து விட்டு அதை மீண்டும் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கே வழங்க வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக பலகட்ட போராட்டங்களை மீனவர்கள் நடத்தி வந்தனர். தமிழ்நாடு மீன்பிடி கூட்டமைப்பு (சிஐடியு) இவர்களுக்கு ஆதரவாக களத்தில் நின்றது.
மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் குத்தகை ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு 16.11.2017 அன்று இறுதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமை மீனவர் கூட்டுறவு சங்கத்திற்குதான் என்று தீர்ப்பு வழங்கினர்.
வழக்கில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் ஆஜரானார்.
இத்தீர்ப்பு கிடைத்ததில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் பங்கு முக்கியமானது. அவர்தான் வழக்கு விசாரணையின் போது மீனவர்களுக்கு ஆதரவான உத்தரவுகளை அரசின் மீன்வளத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பெரும் முயற்சி எடுத்தார்.
இதனால் மீன்வளத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மீன்வளத்துறை இயக்குநர் சார்பில் மீனவர்களுக்கு சாதகமான அரசு உத்தரவு அரசு வழக்குரைஞர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தனியார் ஒப்பந்ததாரர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்ற நிலையில் எச்சரிக்கையாக மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 23.01.2018 அன்று ‘‘கேவியட்’’ மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படியே 25.01.2018 அன்று தனியார் ஒப்பந்ததாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனு 12.02.2018 அன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகின்டன் நாரிமன் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீனவர் கூட்டுறவு சங்கம் சார்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் எஸ்.பெனோ பென்சிஹர் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் ஒப்பந்ததாரர் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இத்தகவல் அந்தியூர் மீனவர்களுக்கு கிடைத்ததும் அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததனர். தங்களுக்கு ஆதரவாக உதவிய அனைவருக்கும் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
அந்தியூர் வரலாற்றில் பொதுநலன் சார்ந்த ஒரு வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது என்றால் அது அந்தியூர் மீனவர் வழக்கு தான் என்று பொதுமக்கள் மீனவர்களின் விடாப்படியான உறுதிமிக்க போராட்டத்தை வாழ்த்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.