ஈரோடு, பிப். 12-
விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் தொடர்பாக விவசாயிகளுடன் தமிழக அரசு மாவட்ட வாரியாக கருத்து  கேட்புக் கூட்டங்கள் நடந்த வேண்டும். 2014 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி நிலத்தை இழந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிலத்தின் சந்தை மதிப்பில் நான்கு மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை இது தொடர்பான பணிகளை அனைத்து இடங்களிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் எஸ்.முத்துவிஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.ஆதிநாரயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கே.முகமது அலி, தமிழ்நாடு விவாசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் எம்.ராஜாமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின்மாநில துணை தலைவர் செ.நல்லாகவுண்டர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், மாவட்ட பொருளாளர் மு.து செல்வராஜ் மற்றும் சிபிஎம்மாநில குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை:
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, விவசாயிகள்பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொருளாளர் கே.ரமேஷ் சிவக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.