தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மற்றும் நச்சுவியல் துறையின் முன்னாள் தலைவரும், கடந்த 22 வருடமாக இந்திய மருத்துவ சட்ட அமைப்பின் தலைவராக உள்ள டாக்டர் ஆர்கே.சர்மா ,  நீதிபதி லோயாவின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையை படித்த பின், நீதிபதி லோயா மாரடைப்பால் இறக்கவில்லை எனவும், அவர் மூளையில் அடிபட்டோ அல்லது விஷத்தினால் இறந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

டாக்டர் ஆர்கே.சர்மா தடயவியல் மற்றும் மருத்துவ சட்ட விவகாரங்கள் தொடர்பாக ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். பல முறை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். மத்திய புலனாய்வுத்துறையில் அலோசகராக இருந்த இவருக்கு அமெரிக்காவின் எப்.பி.ஐ நடத்திய சர்வதேச கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தடய அறிவியல் மற்றும் நச்சுவியல் ஆகியவற்றில் பல தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

நீதிபதி லோயா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் மற்றும்  மகாராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவல்கள்  சில, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும், நீதிமன்றம் மூலமும் பெறப்பட்டது. மகாராஷ்டிரா மாநில புலனாய்வு துறை மாநில அரசுக்கு அளித்த அறிக்கைப்படி, லோயாவின் மரணத்தில் எந்த சந்தேகம் இல்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா மாநில புலனாய்வு துறை அளித்த அறிக்கைக்கும்  சர்மாவின் கருத்திலும் முரண்பாடு உள்ளது.

இது குறித்து  சர்மா கூறுகையில், மருத்துவ அறிக்கைப்படி லோயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த அறிக்கையின் படி, அவரது உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டவில்லை. அவரது ரத்த குழாய்களில் சுண்ணாம்பு படிந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ரத்த குழாய்களில் சுண்ணாம்பு படிந்திருந்தால் அவருக்கு ரத்த ஓட்டம் நிச்சயமாக தடை படாது. அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு நிச்சயமாக வாய்ப்பே இல்லை.

நீதிபதி லோயா இறந்த அன்று அதிகாலை 4 மணிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் காலை 6.15 மணிக்கு இறந்ததாகவும் அறிக்கையில் உள்ளது. அதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டு 2 மணி நேரத்தில் அவர் இறந்திருக்கிறார். மாரடைப்புக்கான அறிகுறி தெரிந்த பின்பு அவர் 30 நிமிடங்கள் உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக அவரது இருதயத்தின் நிலையில் மாற்றம் இருக்கும். ஆனால் அது போன்ற மாற்றம் ஏதும் இங்கு தெரியவில்லை என்றார்.

கரோனரி இதய நோயினால் நீதிபதி லோயா இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்மா கூறுகையில், இந்த அறிக்கைப்படி இருதய நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கரோனரி இதய நோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு கரோனரி இதய நோய்க்காக அறிகுறி தென்படும். மிக முக்கியமாக பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, மூளை மற்றும் தண்டுவடத்தை மறைக்கு வெளிப்புற மென்படலமான டூரா பாதிக்கப்பட்டுள்ளது. மூளையில் அடிபட்டிருந்தால் தான் இது போன்ற பாதிப்பு ஏற்படும் என்றார்.

நீதிபதி லோயாவின் சகோதரியும், மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவருமான மருத்துவர் அனுராதா பியானி முதல் முறையாக லோயாவின் உடலை பார்க்கும் பொழுது, அவரது கழுத்தின் பின் பகுதியில் ரத்த காயம் இருந்துள்ளது. மேலும் லோயாவின் மரணத்திற்கு பின்பாக அனுராதா எழுதியுள்ள டைரி குறிப்பில் , லோயாவின் சட்டை காலரில் ரத்தம் இருந்தது என குறிப்பிட்டுள்ளார். தலையின் பின் பகுதியில் அடிபட்டு ரத்த காயம் இருந்ததாக நீதிபதி லோயாவின் தந்தை ஹரிகிருஷ்ண லோயா, மற்றும் சகோதரி சரிதா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அனுராதா கூறுகையில், லோயா இறக்கும் பொழுது அவருக்கு 48 வயது. புகைபிடிப்பது, மது அருந்துவது, பாரம்பரிய இருதய நோய் என ஏதும் அவருக்கு இல்லை. அவர் தினமும் இரண்டு மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடுவார். நீரழிவு , இரத்த அழுத்தம் கூட இல்லை. எங்கள் பெற்றோர்களுக்கு 85 மற்றும் 80 வயதாகிறது. இருதய நோய் ஏதும் இல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக தான் உள்ளனர் என்றார்.

நீதிபதி லோயா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாக்பூர் மெடிட்ரினா மருத்துவமனை , உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க மகாராஷ்டிரா அரசுக்கு கொடுத்த அறிக்கையில், இருதய பிரச்சனையுடன் லோயா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் எனவும் அவருக்கு நியூரோசர்ஜரி செய்யப்பட்டதற்கான ரசீது இணைக்கப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையில், டூரா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் எதனால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும்  குறிப்பிடப்படவில்லை. இது மிகவும் வினோதமாக உள்ளது. மேலும் கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுநீரகங்கள், உணவுக்குழாய், நுரையீரல் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது, அவரும் விஷம் கொடுக்கப்பட்டதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.  லோயா இறந்து 50 நாட்களுக்கு பிறகு, அவரின் உள்ளுறுப்பு மாதிரிகளில் ரசாயன ஆய்வு செய்யப்பட்ட போது, விஷம் இருந்ததாக தெரியவில்லை. நாக்பூரில் உள்ள பிராந்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நவம்பர் 30 – டிசம்பர் 01, 2014 நள்ளிரவில் இருந்து 14 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆய்வை மேற்கொள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்கள் போதுமானது. ஆனால் எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை என  சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு சமர்ப்பித்த அறிக்கைப்படி, முதலில் நாக்பூர் சீதாபுல்தி காவல் நிலையத்தில் ஜீரோ- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சீதாபுல்தி காவல் நிலையம் மூலமாக பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாக்பூர் அரசு மருத்துவமனையில், டிசம்பர் 01 ஆம் தேதி காலை 10.55 – 11. 50 மணிவரை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சமயத்தில் தான் ஆய்விற்காக திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் முதல் தகவல் அறிக்கை நாக்பூர் சர்தார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சர்தார் காவல் நிலையம் தான் பரிந்துரை கடிதத்துடன் நீதிபதி லோயாவின் திசு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டது முதல் வழக்கு சர்தார் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட காலகட்டத்தில் திசு மாதிரிகள் யாருடைய பொறுப்பில் இருந்தது, யாருடைய மேற்பார்வையின் கீழ் திசு மாதிரிகள் சர்தார் காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. அதேபோல, பிரேத பரிசோதனை முடிவடைந்த உடன் மாதிரிகளை ஏன் தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பவில்லை என்பது குறித்த தகவலும் சரியாக இல்லை.

நீதிபதி லோயாவின் இறப்பு மற்றும் அவரது உடல்நிலையில் குறித்து பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்களும் திசு ஆய்வில் உள்ள தகவல்களும் மாறுபட்டு இருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கைப்படி, ரிகார் மார்டிஸ் என்னும் உடலின் விறைப்பு தன்மையை பதிவுச் செய்யும் பகுதியில், மேல் மூட்டுகளில் சிறிதளவு இருக்கிறது எனவும், கீழ் மூட்டுகளில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே திசு ஆய்வறிக்கையில், விறைப்பு தன்மை நன்றாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. உடலின் விறைப்பு தன்மை ஒரே சமயத்தில் இருவேறாக இருக்க முடியாது.

இறப்பிற்கான காரணம் என்ற பகுதியில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கரோனரி இருதய நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் திசு ஆய்வறிக்கையில் திடீர் மரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் விவரம் என்ற பகுதியில், திசு ஆய்வறிக்கையில் இயற்கை மரணம் என குறிப்பிடப்பட்டு, இறக்கை மரணம் என்ற வார்த்தை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆனால் லோயாவில் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்கு முன்பாக நாக்பூர் சீதாபுல்தி காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் திசு ஆய்வறிக்கை இரண்டுமே நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் தயாரிக்கப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட திசு ஆய்வறிக்கையை வைத்து பார்க்கும் பொழுது, திசு ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள் பிரேத பரிசோதனையை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. பிரேத பரிசோதனை செய்த அதே மருத்துவர் தான் இந்த ஆய்வறிக்கையும் தாயார் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

இரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும் பொழுது பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்கள் திசு ஆய்வறிக்கைக்கு பயன்படுத்தப்படும் என்பது தான் நடைமுறை என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தடவியல் துறை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீதிபதி லோயா விவகாரத்தில் இரண்டு ஆய்வறிக்கைகளிலும், அரசு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் மருத்துவர் என்கே. துமாராம் கையெழுத்திட்டுள்ளார்.ஆனால் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு அறிக்கையில் உள்ள தகவல்கள் மாறுபட்டுள்ளது. இது தொடர்பாக துமாராம்-மிடம் கேட்ட பொழுது, லோயா வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இது தொடர்பாக ஏதும் கூறமுடியாது என கூறிவிட்டார்.

இந்த மருத்துவ அறிக்கையை படித்த  சர்மா, இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் வைத்து பார்க்குக் பொழுது, இது தொடர்பாக கண்டிப்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

நன்றி : http://www.caravanmagazine.in/vantage/death-judge-loya-medical-documents-rule-heart-attack-forensic-expert
தமிழில் : ஆர்.சரண்யா

Leave a Reply

You must be logged in to post a comment.