மேட்டுப்பாளையம், பிப்.12-
நீலகிரி மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க எடுக்கப்பட்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வரும் மலைரயில் ஆரம்பகட்டத்தில் நிலக்கரியினை எரித்து இதன் மூலம் உருவாகும் நீராவியின் உந்து சக்தியில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. ஆனால், நிலக்கரி மூலம் இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் நிலக்கரி பயன்பாட்டை நிறுத்தி விட்டு அதன் பழமை மாறாமல் பர்னஸ் ஆயில் மூலம் மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மலை ரயிலை இயக்க ஆறு எஞ்சின்கள் உள்ள நிலையில், இதில் ஒன்று மட்டுமே நிலக்கரி மூலம் இயங்கும் என்ஜினாக இருந்து வந்தது. இதுவும் கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் மலைரயிலின் பழமையை பறைசாற்றும் வகையில் உதகை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இச்சூழலில் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை மீண்டும் நிலக்கரி மூலம் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தது.

இதனையடுத்து இந்த நிலக்கரி என்ஜின் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பழுது பார்க்கப்பட்டது. இதன்பின் சுமார் பத்தாண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த என்ஜின் மீண்டும் இயங்கும் வகையில் சரி செய்யப்பட்டது. புதுபிக்கப்பட்ட நிலக்கரி எஞ்சினோடு ஒரு பெட்டியினை மட்டும் இணைத்து திங்களன்று சமதளப் பகுதியான மேட்டுப்பாளையம் முதல் கல்லார் ரயில் நிலையம் வரை உள்ள எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி சோதனை நடத்தப்பட்டது. ஆனால், நிலக்கரி என்ஜினால் இரண்டு கிலோமீட்டர் தூரம் கூட பயணிக்க இயலவில்லை. என்ஜினின் உந்து சக்தி முற்றிலுமாக குறைந்து மேட்டுப்பாளையம் பவானியாற்று பாலத்தோடு நின்று விட்டது. இதனால் பழமையான முறைப்படி மீண்டும் நிலக்கரி மூலம் மலை ரயிலை இயக்கும் ரயில்வே நிர்வாகத்தின் முதல் சோதனையோட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேநேரம், நிலக்கரி எஞ்சினின் குறைபாடுகள் கண்டறியப்பட்டு இதனை இயக்கம் முயற்சி தொடரும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: