கோவை, பிப். 12-
லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை 4 நாட்கள் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேராசியர் பணியிட நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியர் தர்மராஜ் ஆகியேரை கடந்த பிப்.3 தேதி கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். பின்பு இருவரும் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து கணபதியை 5 நாட்கள் காவல்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி கடந்த பிப்.8 தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜான்மினோ முன்னிலையில் திங்களன்று நடைபெற்றது. இதையடுத்து துணைவேந்தர் கணபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, துணைவேந்தர் கணபதியை காவல்துறையினர் காவலில் வைத்துவிசாரிக்க பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை 6.30 வரை 4 நாட்கள் அனுமதி அளித்தும், தினமும் அரை மணி நேரம் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சந்தித்து பேச அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் துணைவேந்தர் கணபதியை அழைத்து சென்று விசாரணையை துவக்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.