ஈரோடு, பிப்.12-
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடியதற்காக வாலிபர், மாணவர் சங்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அனைவரையும் விடுதலை செய்து ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம், அண்ணமார் பெட்ரோல் பங்கு முன்பு கடந்த 4.8.2015 அன்று டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆவேசமிகு போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இந்நிலையில் திங்களன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் சங்கத்தின் அன்றைய மாவட்ட செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டத் தலைவர் மு.சத்தியானந்தன், மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கௌதம், நாமக்கல் மாவட்ட தலைவர் பி.ரஞ்சித்குமார் உள்ளிட்ட 18 பேர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதேபோராட்டத்தில் பங்கேற்ற 8 பெண்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.