கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள சங்கரநாராயணர் கோவிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம் தனி நபர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், அதை மீட்டு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடக்கோரியும் முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோவில் சொத்துக்களை பாதுகாக்க குழு அமைக்க அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த வழக்கை பொறுத்தவரை கோவில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழக கோவில் சொத்துக்கள் யார் யார் வசம் உள்ளன என்பது குறித்து பத்திரிகை, கோவில் விளம்பர பலகைகள், இணையதளத்தில் வெளியிட வேண்டும். நிலங்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து 4 வாரத்துக்குள் வாடகைத் தொகையை செலுத்த வேண்டும்.

தமிழக கோவில் சொத்துக்களுக்கு தற்போதைய சந்தை விலை அடிப்படையில் வாடகையை நிர்ணயிக்க குழு ஒன்றை இந்து சமய அறநிலையத்துறை அமைக்க வேண்டும். நிர்ணயிக்கப்படும் வாடகையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நிலத்தை தொடர்ந்து குத்தகைக்கு வழங்கலாம். அந்த புதிய வாடகையை ஏற்க மறுப்பவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு பொது ஏலம் மூலம் வாடகைக்கு விட வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து குழு அமைத்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வாடகை பாக்கி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலம் மூலம் வரும் வருமானத்தை கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: