திருப்பூர், பிப்.12-
கேரள மண்ணின் பெருமைக்குரிய மதசார்பற்ற பாரம்பரியத்தை எக்காரணம் கொண்டும் விட்டுத் தர மாட்டோம், மதவெறி சக்திகளை தலைதூக்க அனுமதிக்க மாட்டோம் என்று கேரள மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசக் கூறினார்.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று நடைபெற்ற தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற தாமஸ் ஐசக்பேசுகையில், கேரளாவில் வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் ஏராளமான நலத்திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு பெருமளவு நிதி தேவைப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தினால் கேரளாவின் வருமானம் 30 சதவிகிதம் அதிகரிக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் வரி வருவாயில் ஏழெட்டு சதவிகிதம்தான் அதிகரித்துள்ளது. எனவே நலத்திட்டங்களை அமலாக்க நிதி சிரமம் ஏற்படுகிறது. எனினும் நலத்திட்டங்களைக் கைவிடமாட்டோம். நெருக்கடியைச் சமாளித்து கேரளாவின் வளர்ச்சியையும், மக்கள் நலத் திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வோம்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கேரளாவின் மதசார்பற்ற பாரம்பரியத்தை பாதுகாப்போம். மதசார்பின்மையையும், சகிப்புத்தன்மையையும் பாதுகாப்போம், மதவெறி சக்திகள் தலை தூக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். முன்னதாக கேரள சமாஜம், கைரளிசங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். டாக்டர் தாமஸ்ஐசக்கின் ஆங்கில உரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிசார் அகமது மொழியாக்கம்செய்தார்.

Leave A Reply

%d bloggers like this: