மும்பை, பிப்.11 –
நாட்டின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ), 20 ஆண்டுகளுக்குப் பின் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

2017-ஆம் ஆண்டில், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த 3-ஆம் காலாண்டில், எஸ்பிஐ ரூ. 2 ஆயிரத்து 416 கோடியை இழந்துள்ளது. இதற்கு முன் கடைசியாக கடந்த 1999-ஆம் ஆண்டின், ஒரு காலாண்டில் ரூ. 155 கோடி அளவிற்கு எஸ்பிஐ வங்கி நஷ்டத்தைச் சந்தித்தது. அதன்பின் ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு மேலாக இழப்பைச் சந்திக்காமல் இருந்த நிலையில், இப்போது முதல் முறையாக, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று பெருமையடித்த மோடியின் ஆட்சியில் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளது. வங்கியின் வாராக்கடன் ரூ. 23 ஆயிரம் கோடியாக அதிகரித்ததும், குறிப்பாக மின் திட்டங்களுக்கு கொடுத்த கடனை மறுபடியும் வசூலிப்பதில் ஏற்பட்ட சுணக்கமே இந்த நஷ்டத்திற்கு காரணம் என்று எஸ்பிஐ கூறியுள்ளது. “ஏறக்குறைய ரூ. 25 ஆயிரத்து 830 கோடி கடன்கள் வாராக் கடனாக மாறிவிட்டன; ஒவ்வொரு கணக்காக நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்; அடுத்து வரும் காலாண்டுகளில் வாராக்கடன் அளவை குறைத்துவிடுவோம்; கடன் கொடுத்தவர்களின் கடனை திருப்பி வசூலிப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எஸ்பிஐ வங்கி எடுத்து வருகிறது; பெரு நிறுவனங்கள் மீது திவால்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டால் வாடிக்கை யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது பற்றியும் விரைவில் விவாதிக்கப்பட்டு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று ரஜ்னீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.