இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் தேர்தல் நடக்கப்போகிறது. இப்போது நரேந்திர மோடிக்கு நல்லவர் என்ற அடையாளம் தேவைப்படுகிறது. பாலஸ்தீனத்திற்கு அவர் பயணமாகியிருக்கிறார். பாலஸ்தீனத்திற்குச் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற பெயரையும் தட்டிச் சென்றிருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்புதான் இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்திருந்தார். அதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இந்தியப் பிரதமர் இஸ்ரேல் சென்றிருந்தார். அங்கும் இங்கும் இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கமும் பிணைப்பும் அதிகமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இஸ்ரேலுடன் பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் வாங்குவதற்கான பேரங்கள் அதிகரித்தன. இன்றைய நிலையில் உலகிலேயே இஸ்ரேலிடமிருந்து மிக அதிகமாக ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் மூன்றாவது பெரிய நாடு இந்தியா என்ற நிலைக்கு மோடி அரசு கொண்டு சென்றிருக்கிறது.

ஆயுதங்களுக்காக இஸ்ரேலுக்கு இந்தியா கொடுக்கும் பல லட்சம் டாலர் பெறுமான பணத்தைக் கொண்டு, இஸ்ரேல் பாலஸ்தீனர் களை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனர்களின் இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனர்களின் வாழ்வு சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனர்கள் ஒவ்வொரு நிமிடமும் நாடற்றவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அரபு பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவலாளியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் மட்டுமின்றி, அமெரிக்காவுக்கு அடிபணியாத இதர நாடுகளையும் குறி வைக்கிறது; குந்தகம் விளைவிக்கிறது. பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, வலதுசாரி பிற்போக்குவாத ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு ஏற்ற சர்வதேசக் கூட்டாளியாக இஸ்ரேலின் வலதுசாரி பிற்போக்குவாத – யூத இனவாத பெஞ்சமின் நேதன்யாகுவின் அரசு கைகோர்த்துக் கொண்டது. இஸ்ரேலின் கைகளைப் பற்றிக் கொண்டு அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சிக் கூட்டணியின் விசுவாசமிக்க கூட்டாளியாகவே தன்னை – தமது அரசை வெளிப்படுத்திக் கொண்டார் நரேந்திர மோடி. இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்ட போது, வழக்கமாக சர்வதேச தலைவர்கள் கடைப் பிடிக்கும் பாணியைக் கூட கைக்கொள்ளாமல் – பாலஸ்தீனத்தின் தலைமையகமான ரமல்லாவுக்கு செல்லாமல் – திட்டமிட்டு தவிர்த்தார்மோடி. இந்திய இடதுசாரிகளின் – இந்திய ஜனநாயக சக்திகளின் கண்டனங்களை அசட்டை செய்தார் மோடி.

இத்தகைய பின்னணியில் திடீரென்று ஜோர்டான் வழியாக ரமல்லாவில் கால் பதித்து, பாலஸ்தீனத்தின் மகத்தான போராளி யாசர் அராபத்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார். சுதந்திர பாலஸ்தீனமே இந்தியாவின் பாரம்பரிய முழக்கம் என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார். இந்தியாவில் முஸ்லிம் மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பை சம்பாதித்துள்ள மோடி மீது, ஒட்டுமொத்த இந்திய மக்களும் நாளுக்கு நாள் வெறுப்பை வெளிப்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். இப்போதுநல்லவர் வேடம் அவருக்குத் தேவைப்படுகிறது. நல்லவர் போல யாசரின் பூமிக்கு சென்றிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.