பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், எதிர்க் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி 12 அன்று இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னை கோட்டையை நோக்கி ஊர்வலம் நடைபெறுகிறது. அனைத்து எதிர்க் கட்சிகள் சார்பில் 13 ஆம் தேதி மாவட்டத்தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படுகின்றது. இப்படியாக போராட்ட அலை அடித்துக் கொண்டே இருக்கிறது.

ஓட்டை உடைசல் பேருந்து!
இம்மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கடலூருக்கு அரசுப் பேருந்தில் பயணித்தபோது, கட்டணம் ரூ.205. எனது இருக்கையின் கைப்பிடி, மேல் உறையின்றி கையைபதம்பார்க்கும் வகையில் துருப்பிடித்த கம்பி மட்டுமே நீட்டிக் கொண்டிருந்தது. இருக்கையில் சாயும் வசதியும் இயங்க வில்லை. புத்தகம் வைக்கும் கயிறு வலை, தண்ணீர் பாட்டில் வைக்கும் கயிறு வலைகளும் அறுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. பக்கவாட்டில் கண்ணாடியும் கிடையாது. இந்த பேருந்துக்கு பொருத்தமே இல்லாமல் அல்ட்ரா டீலக்ஸ் என்று பெயர் பலகை பொருத்தப்பட்டி ருந்தது. இது குறித்து அந்த பேருந்தின் நடத்துநரிடம் கேட்டதற்கு அவர் “இந்த பேருந்தில் இவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அதிகாரிகளின் உத்தரவு.

அதைத்தான் நான் செய்கிறேன். பயணி களின் வசதி, பாதுகாப்புகள் பற்றி அதிகாரியிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியாது” என்றதும் நடத்து நருக்கு எதிராகவும் அரசின் நடவடிக் கைக்கு எதிராகவும் சக பயணிகள் ஒருமித்த குரல் எழுப்பினர். இரவு நேரம் என்பதால் பிரச்சனையை அத்தோடு முடித்துக் கொண்டோம். அடுத்த நாள் காலையில் கடலூரி லிருந்து சிதம்பரம் சென்று வடலூர் புறப்பட்டபோது, சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி அதிரவைத்தது. பேருந்து நிலையத்தில் புறப்பட தயாராக நிறுத்தி வைத்திருந்த, சென்னை செல்லும் அரசுப் பேருந்தின் கண்ணாடி ஓட்டைகளை மறைக்க காலண்டர் அட்டையை மாட்டிக்கொண்டிருந்தார் நடத்துநர் ஒருவர். மற்றொரு பயணியோ, ‘பஸ் கட்டணத்தை உயர்த்தும் அரசுக்கு ஓட்டை, உடைசல் இல்லா பேருந்துகளை ஓட்ட வேண்டும் என்றோ, எங்களைப் போன்ற கிராமவாசிகளுக்கு குறைந்த கட்டணத்தில் பஸ் வசதி கொடுக்க வேண்டும் என்றோ ஏன் தோன்றவில்லை’என முணு முணுத்துக் கொண்டே சென்றார். வடலூரிலிருந்து புறப்பட்ட பேருந்தில் சென்னைக்கு பயணித்த போது, கட்டணம் ரூ. 200. அந்த பேருந்தில் சில இருக்கைக ளின் மேல் பொருத்தப்பட்ட கவர், டார் டாராக கிழிந்து கந்தலாக காட்சியளித்தது. அந்த பேருந்தின் கண்ணாடிகளை பெரும்பாலும் திறக்கவே முடியவில்லை.

அதிகாலை நேரம் என்பதால் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. நேரமாக ஆக சென்னையை நெருங்கும்போதுதான் பயணிகளுக்கு தெரியவந்தது; ஓட்டுநர் இருக்கையின் பின்புற இரும்பு கிரிலுக்கு தகரம் இல்லாததால், காக்கி கலர் அட்டை அடைக்கப்பட்டிருந்தது.

கண்டபடி கட்டணம்…
விழுப்புரத்திலிருந்து உளுந்தூர் பேட்டைக்கு 37 கி.மீ தூரம். இதற்கு பயணக் கட்டணமாக ஒருவருக்கு ரூ. 25, 27, 30, 33, 35, 37 என பல விதங்களில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பேருந்துகள் பல விதங்களில் இல்லை. பயணிகள் வசதி யோடு பயணிக்க எந்த ஏற்பாடும் செய்யாமல், மனஉளைச்சலோடு நடத்துநர், ஓட்டுநரிடம் சண்டை போடும் விதத்தில் ஓட்டை உடைசலான, பேருந்துகளைத்தான்
இயக்குகின்றனர். இதில் நெரிசலுக்கேற்ப ஸ்டாண்டிங் (நின்று செல்லும்) பயணி களும் உண்டு.

தனியாக கவனிக்கும் தனியார்!
மனம்போன போக்கில் குறைந்த தூர புறநகர் பேருந்துகளை வழக்கமாக இயங்கும் தடத்திலிருந்து சென்னை, சேலம், திருச்சி என மாற்றி இயக்குவதால் உள்ளூர் பயணிகள், பணிக்கு செல்வோர் என பலத் தரப்பினரும் பாதிக்கப்படு கின்றனர். இப்படி தடம் மாற்றி இயக்கப்படுவதன் பின்னால் கழகங்களின் அதிகாரிகள், துணை மேலாளர் (இயக்கம்), பணிமனை கிளை மேலாளர்கள் என சிலருக்கு தனியார் பேருந்து முதலாளிகளின் “பலத்த கவனிப்பு” உள்ளதாகவும் உறுதியாகக் கூறப்படுகிறது.

பணச்சீட்டாக பயணச்சீட்டு!
அதிகாரிகளின் சூதாட்டம் இதோடு முடியவில்லை. முன்பு பயணச்சீட்டில் ஏறும் ஊர், இறங்கும் ஊர், தொகை எழுதப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் இயந்திரத்தில் வழங்கப்பட்ட பயணச் சீட்டில் இவற்றோடு தடம் எண், நேரம் இவையும் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டது. இது நடத்துநர்களுக்கும், பயணி களுக்கும் வசதியாக இருந்தது.  ஆனால், தற்போது ரூபாய் மட்டும் அச்சிட்டு நகரப் பேருந்து பயணச் சீட்டைப் போல வழங்கப்படுகிறது. இதிலும் 205 ரூபாய் கட்டணத்திற்கு 100 ரூபாய் சீட்டு இரண்டும், ரூபாய் 5 சீட்டு ஒன்றும் வழங்கப்படுகிறது. 175 ரூபாய் கட்டணத்திற்கு 100 ரூபாய் சீட்டு ஒன்று, 50 ரூபாய் ஒன்று, ரூபாய் 10 இரண்டு, 5 ரூபாய் ஒன்று என 5 சீட்டுகளை கிழித்து கொடுக்கிறார். 75 ரூபாய் கட்டணத்திற்கு 50 ரூபாய் சீட்டு ஒன்றும், 5 ரூபாய் சீட்டு ஐந்தும் வழங்கப்படுகிறது.

இந்த முறையால் கூடுதலான பணிச்சுமையை நடத்துநர்கள் சந்திக்கிறார்கள். ஆனால் சேவையில் ஒரு பிரச்சனை என்றால் நிர்வாகம் தப்பித்துக் கொள்ள இயலுகிறது. இதிலும் மறைமுகமாக ஸ்டேஷனரி செலவு என்ற வகையில் முறைகேடு நடைபெறுவதாகவும் தொழிலா ளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விழுப்புரம் கழகத்தில் போலி டிக்கெட் புழக்கத்தில் விட்ட முன்னுதாரணமும் உண்டு.

சித்தன் போக்கில் அரசு!
சட்டங்களை இயற்றும் அரசே அச் சட்டங்களை மதிக்காமல், பேருந்து பயணிகளிடம் சட்டவிரோதமாக கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வை பலமடங்கு உயர்த்தி தமிழக அதிமுக அரசு பொதுமக்களை கடும் துன்பத் துக்குள்ளாக்கியது. கடந்த காலங்களில் கட்டண உயர்வு என்பது கிலோ மீட்டருக்கு இத்தனை பைசா என உயர்த்துவது வழக்கம். ஆனால் இந்தமுறை எடப்பாடி அரசால் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு கிலோ மீட்டர் மற்றும் ஸ்டேஜை அடிப்படையாக வைத்தும், குறைந்தபட்ச கட்டணத்தி லிருந்து இவ்வளவு ரூபாய் என மனம்போன போக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்ட் போட்டு சைக்கிள் ஓட்டும் அரசு!
போக்குவரத்துத் துறையிலும், மோட்டார் வாகன சட்டப்படியும் அரசுப் போக்குவரத்துக்கென உருவாக்கப் பட்டுள்ள சட்டத் திட்டங்களை மீறி கழக உயரதிகாரிகளின் குறுக்கு புத்தியின் செயல்பாட்டால் பல பெயர்களில் ஸ்டிக்கர்களைஅரசுப் பேருந்துகளில் ஒட்டி பயணிகளின் பாக்கெட்டிலிருந்து பணத்தை களவாடுகின்றனர். அரசு விரைவுப் போக்கு வரத்துக்கழகத்திற்கு மட்டும்தான் நீண்டதூர பேருந்து இயக்க அனுமதி உண்டு, அதற்கான சில வசதிகளோடு (எண்ணிக்கை குறைவான, விசாலமான இருக்கை, நிறுத்தங்கள் குறைவு, பேருந்திலேயே குடிநீர்… இப்படி பல). ஆனால் அதிகாரிகள் அனைத்து கழகங்களிலிருந்தும் குறைந்த தூர, புறநகர் பேருந்துகளையும்கூட எக்ஸ்பிரஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், பிரிமியர் டீலக்ஸ், டிஎஸ்எஸ்(டைம் சேவிங் சர்வீஸ்), ஒன் டூ ஒன் துவங்கி ஒன் டூ செவன் வரை என பல பெயர்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியும் டிஜிட்டலில் பெயர் பலகையை வைத்தும் கண்டபடி பயணக் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கின்றனர். ‘ஸ்டாண்ட் போட்டு சைக்கிள் ஓட்டுவதுபோல’ எந்த வசதியும் செய்யாமல் சுரண்டுகின்றனர். இது மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானதோடு பொதுப் போக்குவரத்து சேவைத் துறையாக உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை முற்றிலும் சிதைப்பதாகும்.

கூடும் ரயில் பயணம்
பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு தமிழகத்தில் ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. குறிப்பாக கடந்த ஜனவரி 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரைக்கும் தினசரி டிக்கெட் எடுத்து பயணம் செய்தோர் எண்ணிக்கை 73 லட்சத்து 93 ஆயிரத்து 154 ஆகும். ஆனால், கடந்த ஆண்டில் 68 லட்சத்து 86 ஆயிரத்து 743 பேர் தான் பயணம் செய்துள்ளனர். கடந்த 7 நாட்களில் தினசரி பயணிகள் எண்ணிக்கை 8 லட்சமாகஅதிகரித்துள்ளது. இதை நினைக்கும்போது “டப்பா பேருந்து, டபரா பேருந்துடா” என்ற பாடல்வரிகள்தான் மீண்டும் நினைவுக்கு வருகிறது.மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சட்டத்தின் பலனை பொதுமக்களுக்கு சாதகமாக்கிட வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஏழை, எளிய மக்களுக்கு முறையாக, சட்டப்படியான குறைந்த கட்டணங்களை நிர்ணயிக்க வழிகோல வேண்டும். லாப, நஷ்டம் பார்க்க இது ஒன்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் கம்பெனியல்ல.

Leave a Reply

You must be logged in to post a comment.