சேலம், பிப். 11-
சேலம் சிறை தியாகிகள் நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டு நினைவு ஜோதி மற்றும் செந்தொண்டர் பேரணியுடன் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடு விடுதலைக்கு பின் 1948 – 51 வரை கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சேலம் மத்திய சிறையில் தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு இருந்தனர். 1950 ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி 15 கம்யூனிஸ்டுகளை அனெக்ஸ் பகுதியில் இருந்து மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இரைக்க வைத்து கொடுமைப்படுத்தினர்.

இதனை எதிர்த்து போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினரை நெம்பர் அட்டை அணிய வேண்டும் என ஜெயிலர் தெரிவித்து கொடுமை படுத்தி பிப்ரவரி 11ம் தேதி ஒரே அறையில் வைத்து 105 ரவுண்ட் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 17 பேர் துப்பாக்கி சூட்டிலும், 5 பேர் அடித்தும் கொள்ளப்பட்டனர்.இதன் நினைவாக சேலம் சிறை தியாகிகள் தினம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் அனுசரித்து செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. முன்னதாக மத்தியசிறை முன் மாநகர வடக்கு செயலாளர் எம்.முருகேசன் செங்கொடியை ஏற்றி வைத்தார். நினைவு ஜோதியை மாநில குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி எடுத்து கொடுத்தார். பின் அங்கிருந்து மாவட்டசெயற் குழு உறுப்பினர் எ.முருகேசன் தியாகிகள் நினைவு ஜோதியை ஏந்தி வந்தார். பின் கோட்டை மைதானத்தில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தோழர்  பி.தர்மலிங்கம், மாநில குழு உறுப்பினர் பி.தங்கவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சேதுமாதவன், ஆர்.குழந்தைவேல், வி.கே.வெங்கடாச்சலம், ஆர் .தர்மலிங்கம், எம்.குணசேகரன், எ.ராமமூர்த்தி, டி.உதயகுமார், ஜி.கணபதி, உள்ளிட்டு இடை கமிட்டி செயலாளர்கள், மாவட்ட குழு, இடைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு ஏராளமனோர் பங்கேற்றனர் முன்னதாக, சேலம் மாவட்ட குழு அலுவலகமான சேலம் சிறை தியாகிகள் நினைவகத்தில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, மாவட்ட குழு உறுப்பினர் எ.கோவிந்தன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

இதோபோல், அரியாக்கவுண்டம்பட்டி சக்கரை புளியமரம் அருகில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார் செங்கொடியினை ஏற்றினார். மாவட்டக்குழு செயலாளர் பி.ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.சந்திரன், மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: