சென்னை, பிப். 11-
தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்.

இதுவரை திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – கம்பர் -அப்பர் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – புதுமைப்பித்தன் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்த கட்டுரைகளை அரங்கேற்றியிருக்கிறார். ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து 13ஆம் கட்டுரையை அரங்கேற்றிய வைரமுத்து, 14ஆம் ஆளுமையாக மறைமலையடிகள் பற்றி எழுதிய கட்டுரையை அரங்கேற்றுகிறார்.நாளை 13ஆம் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கத்தில் விழா நிகழ்வு நடக்கிறது.

தொழில்நுட்ப யுகம் இளைஞர்களின் நேரத்தை துண்டாடிவிட்டது. புதிய தலைமுறை ஆழமான தமிழைவிட்டு அந்நியப்பட்டு நிற்கிறதோ என்ற அய்யம் எனக்குள் எழுந்தது. எனவே தமிழின் தவிர்க்க முடியாத பேராளுமைகளை நவீன மொழியில் இளைஞர்களுக்குக் கொண்டுசேர்க்க நினைத்தேன். இரண்டு ஆண்டுகளாக இதே பணியில் இருக்கிறேன். தொடர்ந்து இன்னும் சில ஆளுமைகளை எழுதப்போகிறேன். இப்போது தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாகிய மறைமலையடிகளை ஆய்வு செய்து அரங்கேற்றவிருக்கிறேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

நிகழ்வுக்கு உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் திருவாசகம் முன்னிலை வகிக்கிறார். வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.