கோவை, பிப். 11 –
வீரம் என்பது யுத்தம் செய்து வெல்வதல்ல தீமையை அறத்தால் மட்டுமே வெல்ல முடியும் என கோவையில் நடைபெற்ற கம்பன் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.

கோவை கம்பன் கழகம் சார்பில் கடந்த 46 ஆவது ஆண்டு கம்பன் விழா மணி மேல்நிலைப்பள்ளியில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீதியரசர் மகாதேவன் தலைமை வகித்தார். கம்பன் கழக பொருளாளர் ஆர்.ஆர்.பாலசுந்தரம் வரவேற்புரையாற்றினார். முன்னதாக இந்நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இலக்கிய உரையாற்றுகையில், உலகத்தின் பல்வேறு இலக்கியங்கள் உள்ளன. எல்லா கால கட்டங்களுக்கும் பொருந்தும் கம்பராமாயணத்துக்கு நிகரான நூல் இல்லை. இதில் ராமரை மட்டும் சொல்லாமல் கோசலம் என்னும் அழகிய நகரத்தைப் பற்றியும் சொல்கிறார் கம்பர். அரசர்கனின் வாழ்க்கை முறை, சகோதர பாசம், மனிதர்களின் இயல்பான வாழ்க்கை, அறம் காப்பது குறித்தும் வால்மீகியை விட வெகு சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

மேலும், மனோத்தத்து வரீதியாக மனிதர்களை எப்படி அணுக வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. கம்பராமாயணத்தில் அறம் என்ற சொல் 114 இடங்களிலும், மறம் என்ற சொல் 115 இடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அறத்தால் மட்டுமே தீமையை ஒழிக்க முடியும். அறத்தின்படி எவ்வாறு வாழ்வது என்பதையும் கம்பராமாயணத்தில் உள்ள பல்வேறு பாடல்களை குறிப்பிட்டு இலக்கிய உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், காலம் காலமாக உலகத்தின் ஆகச்சிறந்த படைப்பாகவே ஒன்றாகவே பேரறிஞர்களாலும், தமிழ் சான்றோர்களாலும் பார்க்கப்
படுகிறது கம்பராமயணம்.கம்பர் ராமன் என்னும் ஒரு அவதார புருஷனின் கதையை மட்டும் சொல்லி தனது கவியாற்றலை வெளிப்படுத்தினான் என்பது அல்ல. உலகத்தின் ஞானத்தை வாரி வழங்கிய தமிழ் என்னும் அற்புதத்தை ஒவ்வொரு சொல்லிலும் வாரி வழங்கியிருக்கிறார் கம்பர். இதுவரை எழுதிவைக்கப்ட்ட இலக்கணங்களை அனைத்து தாண்டி தனித்துவம் மிக்கதாக உள்ளது.

மூன்று தமிழ்களையும் ஒன்றாக்கி 6 விதமான காண்டங்களில் 123 படலங்களில் 10,368 பாடல்களில் தந்துள்ளார் கம்பர். உலகில் ஆகச் சிறந்த கல்வியாளராக அறியப்பட்ட எர்வார்டு சொல்லியிருக்கிறார் கம்பராமாயணம் உரிய முறையில் மொழி பெயர்க்கப்பட்டால் அதை விடச்சிறந்த நூல் உலகில் இல்லை. இது ஒருஇதிகாசமாக காவியமாக அறியப்படாமல் இந்த மண்ணை மாண்பை தமிழ் என்னும் அற்புதத்தை ஒவ்வொரு சொற்களிலும் உணர்த்துகிறார் கம்பர். தமிழை உணர வேண்டும் என்றால் தமிழ் வார்த்தையின் ஜீவனை உள்வாங்கி உணர வேண்டும். ஆகவே உலகத்துக்கே ஞானத்தை தந்த ஒரேமொழி தமிழ் தான் என்றார்.
முன்னதாக 46 ஆம் ஆண்டு கம்பன் கழக விழா மலரை டாக்டர் என்.ஜி.பி.கல்லூரி முதல்வர் பி.ஆர்.முத்துச்சாமி வெளியிட ஏ.வி.குழும நிறுவனங்களின் தலைவர் ஏ.வி.வரதராஜன் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து, கம்பராயமாயணம் குறித்து இலவச வகுப்புகள் நடத்திய ஆசிரியர்கள் நா.நஞ்சுண்டன், க.முருகேசன், கோவை அரசு கல்லூரி பேராசிரியர் இ.சேனாவரையன், சு.சதீஷ்குமார், புவனேஸ்வரி, பானுமதி, அரவிந்த சுப்பிரமணியம், சயஅட்சயா உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுளை நீதிபதி ஆர்.மகாதேவன், வைகோ ஆகியோர் வழங்கி கௌரவவித்தனர்.

இறுதியாக கம்பன் கழக செயலர் நா.நஞ்சுண்டன் நன்றியுரையாற்றினார். இவ்விழாவில், கம்பன் கழக தலைவர் எஸ்.பதி, துணைத் தலைவர்கள் வி.செல்வபதி, இணைச் செயலர் க.முருகேசன், விஜயா பதிப்பக உரிமையாளர் மு.வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.