ஏங்கெல்ஸ் எழுதிய “ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்” என்ற புத்தகம் வரலாற்றுத் தகவலிலிருந்து உண்மையைத் தேடுகிற வழியை நமக்குக் காட்டுகிறது. 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டு விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சியை பற்றிய நூல் என்றாலும் வர்க்கப் போராட்டங்களுக்கும் பல கிருத்துவ மார்க்கங்கள் தோன்றியதற்கும் உள்ள உறவை ஏங்கெல்ஸ் விளக்குகிறார். இன்றைய வர்க்கபோராட்டங்களின் சித்தாந்த ஆயுதமாக அறிவியல் இருப்பது போல் முந்திய காலகட்டத்தில் கிருத்துவ மண்டலத்தில் பைபிளே சித்தாந்த ஆயுதமாக இருந்ததை ஏங்கெல்ஸ் விளக்குகிறார்.

“ எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய்” என்கிறார் வள்ளுவர் (குறள் எண் 429). ஆனால் அந்த அறிவைப் பெறுவது எப்படி என்று அவர் சொல்லவில்லை.அனுபவம் நமக்கு அதை போதிக்கிறது. அந்த அறிவைப் பெற “வரலாறு தெரிய வேண்டும். வரலாற்று செல்நெறி தெரிய வேண்டும் அவற்றுள் மரபுகள் மாற்றங்கள்- புதுமைகள் எவை எவை என்பது தெரிய வேண்டும்”. இதைத் தொடர்ந்து எது வரலாறு? வரலாற்று செல்நெறி எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு முரண்படும் பல விடைகள் இன்றுண்டு. இன்று இனங்களின் மற்றும் பண்பாடுகளின் மோதல்களே வரலாறு என்று ஒரு சாரார் சித்தரிக்கின்றனர். மன்னர்களின் சாதனைகளும் மோதல்களும் வரலாறாகக் கூறப்படுகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளே மாற்றங்களுக்கு அடிப்படையாக சித்தரிக்கப்படுகின்றன. இந்தவிளக்கங்கள் எல்லாம் தோற்றங்களை வைத்து கூறப்படுகிற வரலாற்று செல்நெறியாகும். இந்த வரலாற்று தகவல்களால் எதிர்காலத்தில் அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை சந்திக்க அவசியமான ஞானத்தைப் பெற இயலாது.

உண்மையில் இந்த விளக்கங்கள் எல்லாம் காரல் மார்க்சும் – ஏங்கெல்சும் நிரூபித்த வர்க்கப் போராட்டங்களே வரலாற்று செல்நெறியாக இருக்கின்றன என்ற உண்மையை மறுக்க கூறப்படும் விளக்கங்களே. இந்த மறுப்புகள் அனைத்தும் தோற்றங்களை வைத்து சுரண்டும் வர்க்க நிபுணர்களின் தயாரிப்புகளாகும். இந்த நூலின் உள் அடக்கம் என்ன? 14ஆம் நூற்றாண்டிலேயே மன்னரை எதிர்த்து பிரிட்டனில் விவசாயிகள் போர்க் கொடி உயர்த்திவிட்டனர் . ஜான் பால் என்ற பாதிரியார் விவசாயிகளைத் திரட்டுவதற்கு பைபிளை சித்தாந்தஆயுதமாகப் பயன்படுத்தினார். ஆனால் ஜெர்மனியில் 16ஆம் நூற்றாண்டில்தான் தாமஸ் முன்சர் என்ற பாதிரியார் தலைமையில்விவசாயிகள் பெரும்திரளாகி மன்னர்களின் விசுவாசப் படையோடு மோதினர். இதேகாலத்தில் கத்தோலிக்க மத பீடத்தை எதிர்த்த பாதிரியார் லூதர் பைபிளுக்குப் புதியவிளக்கம் கொடுத்து புதிதாக முளைத்த முதலாளி வர்க்கத்தின் சித்தாந்தத் தலைவனாக வழிகாட்டினார். புராட்டஸ்டென்ட் மார்க்கத்தை உருவாக்கினார். விவசாயிகளை அடக்கி ஆளுவது அவசியம் என்று பைபிள் வாசகங்களுக்கு புதிய விளக்கம் கொடுத்தார். விவசாயிகளின் எழுச்சியை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க மன்னர்களுக்கு உதவினார். தாமஸ் முன்சரும்லூதரும் எதிரும் புதிருமாக நின்றாலும் இருவருக்கும் வழிகாட்டியது பைபிளே. இந்த வினோதம் எப்படி நேர்ந்தது என்பதை வாசகர் ஆர்வம் குன்றாமல் ஏங்கெல்ஸ் விளக்குகிறார். இந்திய சீன வர்த்தக உறவால் முதலாளிவர்க்கமும் நவீன பாட்டாளி வர்க்கமும் பிரிட்டனிலும் நெதர்லாந்திலும் முதலில் தோன்றின.

ஆனால் ஜெர்மனியில் முதலாளிவர்க்கமும் நவீனபாட்டாளி வர்க்கமும் பின்னாளில்தான் உருவாகின்றன. இந்திய – சீன சரக்குகளை வைத்து பிரிட்டனும் நெதர்லாந்தும் ஜெர்மன் சந்தையில் குவித்து தொழிற் உற்பத்தியை தலைதூக்க விடாமல் முடக்கின. ஜெர்மன் விதித்த தடைகளை அகற்ற சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் நடந்த போரில் இந்திய-சீன வெடி மருந்து பிரிட்டனுக்கு வெல்ல உதவியது என்பதையும் இந்தநூல் விளக்குகிறது.  கத்தோலிக்க மதபீடஆதிக்கத்தால் ஏற்பட்ட முரண்பாடுகள் பிளவினை உருவாக்கி புராட்டஸ்டெண்ட் மார்க்கம் பிறந்தது. பின்னர் இதுவும் பிளவுபட்டு கால்வனிசம் தோன்றியது என்பது வரலாறு. இந்த மார்க்கங்களின் முரண்படும் போதனைகளை அலசினால் அந்த கட்டத்தில் இருந்த ஒவ்வொரு வர்க்கமும் தன் நலனைப் பாதுகாக்க பைபிளையே சித்தாந்த ஆயுதமாக பயன்படுத்தியது புலப்படும். சோகம் என்னவெனில் விவசாயிகள் சார்பில் சமத்துவத்தைமுன் மொழிந்த பைபிளின் விளக்கம் மட்டும் ஒரு மார்க்கமாக ஆகவில்லை. அதாவது மதமார்க்கங்கள் எதுவும் பழைய மற்றும் புதிய வகை சுரண்டல்களை எதிர்க்கும் சித்தாந்தப் போருக்கு ஆயுதமாகாது. அறிவியலே சுரண்டப்படும் மக்களின் சித்தாந்த ஆயுதத்தைத் தயாரிக்க உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை படிப்பவர்கள் உணர முடியும்.

சிம்மர் மென் என்ற வரலாற்று ஆசிரியர் தந்த தகவல்களை இந்த நூல் விரிவாக அலசுகிறது. இந்த மோதல்களில் உள்ளார்ந்து இருக்கும் வர்க்க மோதலை சிம்மர்மெனால் காணஇயலவில்லை . எப்படி பூமி சூரியனை சுற்றுவதை நம்மால் உணர முடியவில்லையோ அது போல்தோற்றப் பிழை உள்ளார்ந்து இருக்கும் வர்க்க
முரண்களை உணரவிடுவதில்லை. ஏங்கெல்ஸ் தோற்றத்தைத் தாண்டி எதார்த்தங்களைத் துப்புதுலக்கி நமக்குக் காட்டுகிறார். 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் சமூகக்கட்டமைப்பை விளக்கியதோடு ஏங்கெல்ஸ் நிற்கவில்லை. அவர் காலத்தில் அதாவது 19ஆம் நூற்றாண்டில் நவீன பாட்டாளி வர்க்கம் அடக்கப்பட்டதால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எழுந்த வர்க்க போரோடு ஒப்பிடுகிறார். 1848இல்ஐரோப்பா முழுவதும் பாட்டாளி வர்க்கம் ஆட்சியாளர்களின் படையோடு மோதி தோல்வியடைந்ததையும் அதனால் விளைந்ததையும் முந்திய நூற்றாண்டுகளில் விவசாயிகளின் எழுச்சி தோற்றதையும் அந்தப் போரினால் விளைந்ததையும் ஒப்பிட்டு எழுதி வரலாற்று செல்நெறி வர்க்கங்களின் மோதலே என்பதைக் காட்டுகிறார்.

அவரது முன்னுரையில் 1525 புரட்சியின் இறுதியில் யார் பயனடைந்தார்கள்? 1848 இளவரசர்கள் (குறுநில மன்னர்கள்) புரட்சியால் யார்பயனடைந்தார்கள்? ஆஸ்திரியா, பெர்சியா இளவரசர்கள். 1525இல் இந்த இளவரசர்களுக்கு ஆதரவாக வரி செலுத்தும் சிறுகுடிமகன்கள் இருந்தனர். 1850களில் இந்த இளவரசர்களுக்கு ஆதரவாக பெரியகுடி உரிமையாளர்கள் துணைஇருந்தனர். இந்த இளவரசர்கள் ஆட்சியில் நாடுகள் கடனில் தத்தளித்தன இந்தப் பெருமுதலாளிகளின் பின்னால் தொழிலாளி வர்க்கம் நின்றது. விளைவு குறுநில மன்னர்களின் அரசுகள் மறைந்து ஜெர்மன் பேரரசு தோன்ற வழிபிறந்தது. 20ஆம் நூற்றாண்டில்தான் ஜெர்மனியில் மன்னராட்சி முடிவிற்கு வருகிறது. இந்தப்புத்தகத்தின்கடைசிபகுதியில் 1525ஆம் ஆண்டு விவசாயிகளின் எழுச்சியால் விளைந்ததை வரிசைப்படுத்துகிறார்.

விவசாயிகள் எழுச்சியினால் மடாலயங்களின் ஆதிக்கம் முடிவிற்கு வந்தது பாதிரிமார்களின் அதிகாரம் பறிபோனது. நிலங்கள் சொத்துக்கள் பறி போயின. தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன. அங்கிருந்த தங்கம் வெள்ளிபலர் கைக்கு போனது. அரசு மத போதகர்கள் பிடியிலிருந்து மதசார்பற்ற எந்திரமாகியது. அரசர்கள் அதிகாரம் பெற்றனர். பழைய சுரண்டல்காரர்கள் காணாமல் போயினர். புதியபூர்சுவாக்கள் அரசியல் செல்வாக்கால் முதலாளித்துவ சுரண்டல் முறை முளைவிடத் தொடங்கியது. விவசாயிகள் தொழிலாளர்கள் வாழ்க்கைஉயரவில்லை. உயிர் வாழ அவசியமானதைத் தவிர வேறு எதுவுமில்லை. விவசாயிகள் பழையபடி அடிமையாயினர் வரிச்சுமை குனியவைக்கிறது. கடந்தகால விவசாயப் புரட்சியும் 19ஆம் நூற்றாண்டில் 1848 தொழிலாளர் எழுச்சியும் அந்த வர்க்கங்களுக்கு விடுதலை தரவில்லை என்பதை உணர்கிறோம்.

வேறு ஒரு கட்டுரையில் இலக்கிய நயம் படஏங்கெல்ஸ் கூறியதே இதைப்படித்தவுடன் மனதில் ஓடுகிறது. விவசாயிகள் தொழிலாளர்களின் எழுச்சிகள் அன்னப் பறவையின் பாட்டாக (ஸ்வான் சாங்) ஆனது என்றார். ஐரோப்பாவில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து அன்னம் துணையைத் தேடி பாடிப் பாடியே கிடைக்காமல் செத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. 1871இல் ஐரோப்பிய பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சியால் உருவான பாரிஸ்கம்யூன் தோல்வி அடைந்தவுடன் விவசாயிகளின் துணை இல்லாத தால் தோற்றது என்று குறிப்பிட வந்தவர் அந்த எழுச்சி அன்னத்தின் பாட்டானது என்கிறார் . ஆக ஒன்றை நாம் தெளிந்து கொள்ளலாம். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’’ என்ற நமது முன்னோர்கள் வாசகம், மொழிக்கு மட்டுமல்ல சமூக வர்க்க கட்டமைப்பிற்கும் இது பொருந்தும் . ஏங்கெல்ஸ் இந்த புத்தகத்தின் மூலம் இதனை நமக்கு உணர்த்துகிறார். எஸ் சுகுமார் நல்ல தமிழில் நமக்குத் தருகிறார்.

(அடுத்த பதிப்பில் முதல் பக்கத்தில் அத்தியாயங்களின் தலைப்புக்களை சேர்ப்பது அவசியம். குறு நில மன்னர்களை இளவரசர்கள் என்று குறிப்பிடுவது பொறுத்தமல்ல. ஏங்கெல்ஸ்(பெசன்ட் வார்) விவசாயிகளின் போர் என்றே குறிப்பிடுகிறார். போராட்டம் என்றசொல் பொருந்தாது)

 

புத்தக: 
ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்
– பிரடெரிக் ஏங்கெல்ஸ்
தமிழில்: எஸ். சுகுமார்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600 018
பக்:160, விலை: ரூ.140/-

Leave a Reply

You must be logged in to post a comment.