புதுதில்லி:
பாஜக தலைமையிலான மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 30 ஆண்டுகள் சராசரிக்கும் கீழே சென்றுவிட்டது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:“இந்தியாவின் வளர்ச்சி விகிதம் நன்றாக இருப்பதாக, நிதியமைச்சர் அருண் ஜெட்லி சொல்கிறார்; ஆனால், 30 ஆண்டுகளாக இருந்த பொருளாதார வளர்ச்சியின் சராசரியை விட, தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதாக உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு கூறுகிறார். மேலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எந்த திசையை நோக்கிச் செல்வதாகவும் கவுசிக் கேள்வி எழுப்பியுள்ளார். முதலீடுகள், சேமிப்பு, கடன் வளர்ச்சி என்று எல்லாமே கீழிறங்கியுள்ளது.

அவ்வாறானால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 4 ஆண்டுகால சராசரி பொருளாதார வளர்ச்சி என்ன?; பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் புதிய முறையின் கீழ் நாட்டின் வளர்ச்சி 7.3 சதவிகிதம் என நீங்கள் கூறலாம்; ஆனால், கடந்த கால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரியைக் காட்டிலும் அது குறைவுதானே! என்று சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வளர்ச்சி விகிதத்தின் இலக்கு என்ன?; முதலீடு ஈர்ப்பு எவ்வளவு?; தொழில்களுக்கு என்ன கடன் கொடுத்தீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

2018-19ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, “ தேசிய ஜனநாயக் கூட்டணி அரசின் கீழ் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது; கடந்த 3 ஆண்டுகளில் 7.5 சதவீத வளர்ச்சியை அடைந்து இருக்கிறோம்; 2.50 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக நாடு வளர்ந்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி, திவால்சட்டம், ஆதார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார்.இதனை முன்வைத்தே சிதம்பரம் தற்போது கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: