====பி.தங்கவேலு=====
1950 பிப்ரவரி 11… இந்திய துணைக்கண்டம் தன்னை குடியரசு நாடாக பிரகனடப்படுத்தக் கொண்ட பதினாறாவது நாள். நாடெங்கும் சுதந்திர காற்று வீசிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த சுதந்திர காற்று இந்திய கம்யூனிஸ்ட்களுக்கு சுவாசிக்க கிடைக்கவில்லை. 1948-1951 காலக் கட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்த தேச பக்த போரில் கம்யூனிஸ்ட்கள் பங்கு மகத்தானது. அளப்பரியது. ஆனால் அவர் சிறைக்கொட்டடியில் அடைத்து வைத்து அகம் மகிழ்ந்தது அன்றைய காங்கிரஸ் அரசு.
அதுமட்டுமா? கம்யூனிஸ்ட்கள் மீது வழக்கு மீது வழக்கு.
கம்யூனிஸ்ட்கள் செய்த குற்றம்தான் என்ன?
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர், உதையப்பரெல்லாம் மாறி, ஒப்பப்பராகிவிடுவர் உணரப்பா நீ” என்று அன்று பாரதிதாசன் பாடினாரே… அந்த “ஒப்பப்பர் கொள்கைகளை” விடுதலை மண்ணில் விதைத்தனர். இதற்கு செங்கொடி ஏந்த வீரச்சமர் புரிந்தனர். இது அன்றைய பிரதமர் ஜவர்ஹலால் நேரு, உள்துறை அமைச்சர் வல்லாய் பட்டேல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஆளும் இந்திய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ வர்க்கத்திற்கு குத்தியது. குடைந்தது. தூக்கத்தைக் கெடுத்தது.
அதனால்தான் தன் வர்க்க பாசத்தைக் காட்டிக் கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்தது. தலைவர்களை சிறையில் அடைத்தது. சிறைகள் எல்லாம் நிரம்பி வழிந்தன. கொடும் அடக்குமுறை ஏவும் கொடுமையான காட்டுமிராண்டித் தனமான சிறைகளையே தேடித்தேடி கம்யூனிஸ்ட்களை அடைத்தது. அத்தகைய கொடும் சிறைகளில் ஒன்றுதான் சேலம் ஆழங்கொட்டைச்சிறை.
அன்றைய சென்னை ராஜதானியில் இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களும் உள்ளடக்கி இருந்தது. அதனால் தமிழர், மலையாளி, தெலுங்கர், இஸ்லாமியர் என 350க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 6 மாதம் முதல் 20 ஆண்டு வரை சிறைத் தண்டனை இவர்களில் பெரும்பகுதி இருபது வயதுக்கு உள்பட்டவர்கள். அரசியல் கைதிகளான இவர்களை சேலம் சிறையில் திருட்டு, கொலை, கொள்ளை வழக்குகளில் தண்டனை பெற்று வந்த கிரிமினல் கைதிகளோடு அடைத்து வைத்து அடக்குமுறையை ஏவி வந்தது சிறை நிர்வாகம்.
அன்று கம்யூனிஸ்ட்கள் சிறையில்… “நாங்கள் சுதந்திரப் போராளிகள்; எங்களை கொலை, கொள்ளை, திருட்டு கைதிகளோடு அடைப்பதோ, அவர்களைப் போல் நடத்துவதோ கூடாது; அதை எங்கள் உயிர் போனாலும் அனுமதியோம்” என நாடெங்குமுள்ள சிறைச்சாலைகளில் வீரச்சமர் புரிந்தார்கள். அதுபோல் சேலம் சிறையிலும் இப்போர் நடந்தது. சுதந்திரப்போராட்ட பாரம்பரிய தியாகிகளாம் கம்யூனிஸ்ட்களுக்கு “அரசியல் கைதிகள்” என்கின்ற உரிமையைக்கூட வழங்கிடாத அரசாக இருந்தது அன்றைய காங்கிரஸ் அரசு. “எங்களை அரசியல் கைதிகளாகவே பாவித்துப் பராமரிக்க வேண்டும்” என்ற குறைந்தபட்ச கோரிக்கையைக்கூட நிறைவேற்றாமல், காக்கைக் குருவிகளைச் சுடுவதுபோல், நிராயுதபாணிகளாக இருந்த கம்யூனிஸ்ட்கள் மீது துப்பாக்கி குண்டுமழை பொழிந்தது. இது சுதந்திர இந்தியாவின் “ஜாலியன்வாலா பாக் படுகொலை என்றே வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகிறது.
சேலம் சிறையில் அன்று நடந்த நரவேட்டை குறித்து அதிலிருந்த தப்பித்த, காலம் சென்ற உத்தமலிங்கம் கூறியதாவது:
“கிரிமினல் கைதிகள்போல் தொப்பி, நெம்பர் பேஜ் அணிய வற்புறுத்தினர். இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. பிப்ரவரி 7ந்தேதி 15 தோழர்களை ‘அனெக்ஸ்’ பகுதியில் இருந்து பிரதான சிறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கு மாட்டு நுகத்தடியில் பூட்டி நீர் இறைக்க வைத்தனர். இதை கேள்விப்பட்ட எங்களுக்கு ரத்தம் கொதித்தது. பிப்ரவரி 11ஆம் தேதி நெம்பர் பேஜ் அணிய மறுத்ததால், ஜெய்லர் கிருஷ்ணநாயர் கொக்கரித்தான். முதலில் தடியடி நடத்தினான். அதை எதிர்கொள்ள சேகரித்து வைத்திருந்த கற்களை நாங்களும் வீசினோம்.
கிருஷ்ணநாயர் மீது ஒரு கல் விழுந்து விட்டது. அவ்வளவுதான். உடனே துப்பாக்கியால் சரமாரி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துவிட்டது நரவேட்டை சிறைத்துறை. அப்பொழுது எங்களை போன்ற இளைஞர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மூத்த தோழர்கள் எமனாய் சீறிப் பாய்ந்து வந்த அந்த துப்பாக்கிக் குண்டுகளைத் தங்களது நெஞ்சில் ஏந்திக் கொண்டனர் எங்களுக்கு கவசமாக! 105 ரவுண்டு சுட்டு தங்களது ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டனர்”.
நெஞ்சத்தைப் பிழிந்தெடுக்கும் இந்த குருசேத்திரப் போரில் 17 கம்யூனிஸ்ட்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகினர். 5 கம்யூனிஸ்ட்கள் அடித்தே கொல்லப்பட்டனர். சேலம் சிறைச்சாலையும், குற்றுயிரும் குறையிருமாக இருந்த கம்யூனிஸ்ட்கள், கை கால் உடல் எல்லாம் ரத்தக் காயங்களுடன் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லும் பாதையில் சேலம் நகரமும் அன்று கம்யூனிஸ்ட்களின் செங்குருதியால் நனைந்தது.
அந்த வீரத்தியாகிகளின் திருப்பெயர்கள் வருமாறு… 1.ஆறுமுகம் (சேலம்), 2.காவேரி முதலியார் (திருச்செங்கோடு), 3.ஷேக் தாவூத் (வேலூர்) 4.எம்கே.கோபாலன் நாயர், 5. பி.கோபால் நாயர், 6.நீலஞ்சேரி நாராயணன் நாயர், 7.பரம்பிக்கடாரம் குஞ்சிப்பா, 8.குஞ்சிராமன், 9.நந்தாரி குஞ்சம்பு, 10.கலாத்தொக்கோயில் ஏதேன், 11.மரோலிகோரன், 12.எம்.நாராயண நம்பியார், 13.புல்லாக்ஜி ஏதேன் கோவிந்தநம்பியார், 14.குஞ்சப்ப நம்பியார், 15.வடகோறையின் மான்ஆசாரி, 16.என்.கண்ணன், 17.காட்டூர் நடுவலப்பிறையில் கோரன், 18.உடையாமாடத்து பலக்கல் நம்பியார், 19.தாளன் ராமன் நம்பியார், 20.எம்.கோபாலக்குட்டி நாயர், 21.நடுக்காண்டி பத்மநாபன், 22.நலப்பறக்கல் பாலன் (கேரளத்தைச் சார்ந்தவர்கள்)
இந்த நரவேட்டையை அன்றைய பிப்ரவரி 15 ‘விடுதலை’ நாளேடு தலையங்கம் துடிதுடிக்க கண்டிக்கிறது… “ஊரெங்கும் 144 தடையையும், ஊர்வலத்திற்கு தடையும், தொழிலாளர் வாய்களில் அடக்குமுறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால், சேலம் நிகழ்ச்சிக்கு நாள்தோறும் கண்டனம் சரமாரியாக கொட்டுவதைக் காணலாம். இன்று மூச்சுப்பேச்சு இல்லை. தமிழ்நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. 22 பிணங்களும் தொழிலாளர் உலகைக் கண்டு ஏளனமாய்ச் சிரிக்கின்றன. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக்கிறது”
‘திராவிடநாடு’ நாளேடு தனது அறச்சீற்றத்தை இவ்வாறு பதிவிடுகிறது… “கேட்டது வாழ்வு; கிடைத்தது சாவு”
ஆனால் அன்றைய ஆளும் வர்க்கத்தின் குரலை பிரதிபலித்த தினத்தந்தி “22 செம்பிடாரிகள் சாவு; கம்யூனிஸ்ட்டுகளுக்கு எமலோகத்தில் சீட்டு’’ என்று எழுதியது.
இதுதான் இந்திய ஆளும் வர்க்கத்தின் அன்றைய முகம். இன்று அது மேலும் கொடூரமாகி வருகிறது. இந்திய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ வர்க்க சுரண்டலுக்கு எதிரான, சமத்துவத்திற்கான போராக கம்யூனிஸ்ட்கள் முன் அன்றைய சவாலாக இருந்தது. ஆனால் இன்று அது மீண்டும் சர்வதேச பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்டாக மாறி, பெற்ற சுதந்திரத்தையும் காற்றில் பறக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் மதவாத பாஜக ஆட்சியில் பொருளாதாரச் சுரண்டலோடு மக்களை, மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் மதவாத அரசியலும் சேர்ந்து கோலோச்சி வருவது வரலாற்றில் பெரும் சவாலாக இருக்கிறது.
பன்னாட்டுச் சுரண்டலையும், மதவாத ஆபத்தையும் ஒரு சேர எதிர்த்து வினையாற்றுவதும், இன்னுயிர் ஈந்து பெற்ற சுதந்திரத்தையும், தேசத்தையும் பாதுகாக்கும் போரில் சமரசமின்றி சமர்புரிவதே சேலம் சிறைத்தியாகிகளுக்கு நாடு செலுத்தும் வீர அஞ்சலியாக இருக்கும். சேலம் சிறைத்தியாகிகள் புகழ் நீடுழி வாழ்க! மக்கள் ஜனநாயக புரட்சி ஓங்குக!

Leave a Reply

You must be logged in to post a comment.