சி.ஸ்ரீராமுலு
வாள் வீச்சு போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்தின் பெருமையை உயர்த்திப்பிடித்து வருகிறார் 19 வயதாகும் காஞ்சிபுரம் மாணவி பிர்தவுஸ். சென்னை அருகிலுள்ள தானிஷ் அகமத் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
தினமும் காலையில் 6 மணிக்கு காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டு 35 கிலோ மீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்து கல்லூரியை வந்தடையும் பிர்தவுஸ், கல்லூரி வகுப்பு முடிந்ததும், சென்னை நேரு மைதானத்திற்கு சென்று வாள் சண்டைப் பயிற்சி எடுக்கிறார். அங்கு பயிற்சியை முடித்ததும் இரவு 8 மணிக்கு சென்னை-திருமால்பூர் ரயில் மூலம் காஞ்சிபுரத்திற்கு பயணித்து, இரவு 12 மணிக்கு வீட்டிற்கு செல்கிறார். மகளின் வருகையை எதிர்பார்த்து ரயில் நிலையத்தில் காத்திருந்து அழைத்து செல்கிறார் தந்தை அயுப்கான்.
இஸ்லாமிய குடும்பமாக இருந்தாலும் தனது மகள் விளையாட்டுத் துறையில் சாதிக்க அப்பாவும் அம்மாவும் அனைத்து வகையிலும் ஊக்கம் கொடுத்து வருகிறார்கள். கட்டுப்பாடுகள் இல்லை. சுதந்திரம் உண்டு. வெளி ஊர், வெளி மாநிலம், பிற நாடுகளுக்கு சென்று விளையாடும்போது பெற்றோர் கூடவே செல்வது இல்லை. பிர்தெவுஸ் விளையாட்டில் மட்டுமல்ல படிப்பிலும் சிறந்த மாணவியாவார். உதாரணத்திற்கு, சிஜிபிஏ லெவல் 9.3 எடுத்து தான் படிக்கும் தானிஷ் அகமத் பொறியியல் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார். மூன்றாம் ஆண்டிலேயே ஆய்வுகள் மேற்கொண்டு மத்திய அரசு நடத்திய மாணவர்களுக்குக்கான திறன் நுண்ணறிவு திட்டத்தின் கீழ் ஆய்வுகளை 48 மணி நேரத்தில், உறங்காமல் இருக்க வேண்டும் எனும் நிபந்தனையுடன் தில்லியில் தனது தலைமையில் விமான போக்குவரத்து நேரடி கண்காணிப்பு கருவியை கண்டுபிடித்து விமானத் துறையின் மூலம் சிறப்பு விருதும் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான தமிழன் தொலைக்காட்சியின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதையும் பெற்றார். படிப்பிலும் விளையாட்டிலும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்து வரும் அவரை கல்லூரியில் சந்தித்தோம்.
விளையாட்டில் ஆர்வம் எப்படி வந்தது?
சின்ன வயதில் இருந்தே விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும். ஆரம்பத்தில் தடகளப் போட்டிகளில் மண்டல அளவில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கினேன். என்னுடன் படித்த மாணவர்கள் சிலர் வாள் சண்டை விளையாடி வந்தனர். அதை பார்த்து எனக்கும் ஆசை வந்தது. ஆனால், மாணவிகள் வாள் சண்டையில் பங்கேற்கமுடியாது. இருந்தாலும், எனது ஆர்வத்தை உடற்கல்வி ஆசிரியரிடம் தெரிவித்தேன். தயக்கம் காட்டாமல் உடனே பயிற்சியில் இணைத்துக் கொண்டார்.
போட்டியின் முதல் அனுபவம் ?
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, வாள் வீச்சுப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரைக்கும் நான் வாள் சண்டைக்கான கத்தியை பார்த்ததே கிடையாது. ஆரம்பத்தில் பயமாகதான் இருந்தது. எனது சீனியர்கள் கொடுத்த உற்சாகத்தால் இறுதிப் போட்டி வரைக்கும் சென்றேன். குறைந்தப் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இரண்டாவது இடம் பிடித்தது எனக்கு திருப்புமுனையை தந்தது.
பதக்கங்கள் குறித்து?
உள்ளூரில் விளையாடி வந்த நான், மாநில அளவிலான முதல் போட்டியிலேயே ‘கோல்டு’ மெடல் வாங்கினேன். இந்த வெற்றிக்குப் பிறகு, நேஷனல் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வு இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. தேர்வு முடிந்ததும் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு, பரிசு, கோப்பைகள் வென்றதால் 12 ஆம் வகுப்பில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்தார்கள். அதிலும் பதக்கம் வென்றேன்.பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பல்கலைக் கழக மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியின் தனி நபர் பிரிவிலும் பதக்கத்தை கைப்பற்றி கல்லூரிக்கு பெருமை சேர்த்தேன். குழு பிரிவிலும் எங்கள் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றேன்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்கப் பதக்கமும், மண்டல அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளேன்.
கடந்த ஆண்டு தாய்லாந்து வாள் சண்டை கழகம் சார்பில் பாங்காங் நகரில் சர்வதேச வாள் சண்டை போட்டி நடந்தது. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட அந்த தொடரில் இந்திய வாள் வீச்சு சங்கம் சார்பில் பங்கேற்ற நான், 9 நாடுகளை தோற்கடித்து தர வரிசையில் இடம்பிடித்தேன்.
வெற்றிக்குப் பின்னால்?
விளையாட்டு மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தானிஷ் அகமத் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. சிறுபான்மையினர் கல்லூரிகளில் மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் தானிஷ் அகமத் கல்லூரி விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
பள்ளியில் படிக்கும் போது எனது சீனியர் சுரேஷ் பயிற்சி கொடுத்தார். கல்லூரியில் சேர்ந்த பிறகு, விளையாட்டு ஆசிரியர் முத்துக் கிருஷ்ணன், சென்னை நேரு மைதானத்தில் நாகு என்கிற நாக சுப்பிரமணியன் ஆகியோரிடம் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறேன். எனது வெற்றிக்கு இந்த பயிற்சியாளர்களே முக்கிய காரணம்.
சர்வதேசப் போட்டியில் விளையாட வெளிநாடு சென்று வருவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் உரிமையாளர் மனோகர், தானிஷ் அகமத் கல்லூரி சேர்மன் மூசா ஆகியோர் நிதி உதவி செய்து எனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் துணைநின்றனர். அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
கட்டமைப்பு வசதிகள் எப்படி உள்ளது?
ஆரம்பக் காலக் கட்டத்தில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு தொழில்நுணக்கங்கள் வளர்ச்சி பெற்றுள்ளது. வெளிநாடுகளைப் போன்று நம் நாட்டிலும் உள்ளூர் போட்டிகளில் துவங்கி சர்வதேசப் போட்டிகள் வரைக்கும் எலக்ட்ரிக் கத்திகளைதான் பயன்படுத்தி வருகிறோம்.
வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவதற்கும், வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் சிறப்பு பயிற்சி எடுப்பதற்கான வசதி வாய்ப்புகள் நம் நாட்டில் குறைவாகவே உள்ளது. வெளிநாடுகளைப் போன்று கூடுதல் வசதி வாய்ப்புகளை மத்திய-மாநில அரசுகள் உருவாக்கி கொடுத்தால் இந்திய வீரர்கள் மேலும் சாதிப்பார்கள்.
விளையாட்டு வீராங்கனையாக உருவெடுத்தாலும் ஐஏஎஸ் அதிகாரி வெ. இறையண்பை ரோல்மாடலாக கொண்டுள்ள இவர், இந்திய ஆட்சிப் பணியாளர் (ஐஏஎஸ்) தேர்வு எழுதி விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெற்றி பெற்று, ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். விளையாட்டுத்துறை பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கவேண்டும். காஞ்சிபுரத்தில் பெண்களுக்கு வாள் சண்டை பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார்.
வரும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி ஆசியன் பல்கலைக் கழகம் சார்பில் சிங்கப்பூரில் நடக்கும் சர்வதேச போட்டிக்காக, சிறப்பு பயிற்சிகள் எடுத்து வரும் பிர்தவுஸ், சர்வதேசப் போட்டிகளில் தாய் நாட்டுக்காக பதக்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்கிற அவரது லட்சியம் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.!கடின உழைப்பு!
வாள் வீச்சு போட்டி மிகவும் கடினமானது. அதிலும் பெண்கள் சாதிப்பது என்பது சர்வசாதாரணமல்ல. எங்கள் கல்லூரியில் கணினிப்பொறித்துறையில் படித்து வரும் மாணவி பிர்தவுஸ் வாள் வீச்சுப் போட்டியில் பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறார். அவருக்கு சிறப்பு பயிற்சியாளரை நியமித்து காலை, மாலை இரு வேளைகளிலும் பயிற்சி கொடுத்து வருகிறோம். போட்டிகளில் கலந்துகொள்ள தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும், ஆராய்ச்சியிலும் சிறந்த மாணவி என்பதால் இரண்டு வருடமாக கட்டண சலுகை அளித்தோம். மூன்றாம் ஆண்டில் கட்டணம் முழுவதையும் நிர்வாகமே ஏற்று ஊக்கமும் முழு ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறோம். கடின உழைப்பும், தொடர் பயிற்சியும், தன்னம்பிக்கையுமே அவரது வளர்ச்சிக்கு காரணமாகும்.
-கல்லூரி தலைவர் மூசா.
முதல் மாணவி…
கடந்த 2002 இல் துவங்கப்பட்டது தானிஷ் அகமத் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியில் 15 ஆண்டுகாலமாக பணியாற்றி வருகிறேன். ஏராளமான மாணவர்கள் படிப்பை முடித்து சென்றுள்ளனர். பலர் தங்களின் திறமைகளை பலவகையிலும் வெளிப்படுத்தி சிறந்து விளங்கினர். இவர்களில், மாணவி பிர்தவுஸ் மிகத் திறமைசாலி. ஒவ்வொரு பருவத்தேர்விலும் உயர் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். படிப்போடு விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவருக்கு கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினோம். எங்கள் கல்லூரி சார்பில் வாள் வீச்சில் சர்வதேச அளவில் விளையாடிய முதல் மாணவி என்ற பெருமையும் இவரையே சாரும்.
-துறை தலைவர் செந்தில்.
படம்: இ. ராமநாதன்

Leave a Reply

You must be logged in to post a comment.