புதுதில்லி:
மத்திய பட்ஜெட், உண்மையைக் கூறாத பட்ஜெட் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு பொதுச் செயலாளருமான தபன்சென் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று தபன்சென் பேசியதாவது:
இந்த பட்ஜெட்டைப் பொறுத்தவரை, நிச்சயமாக இதில் உள்ள அனைத்து நல்ல வார்த்தைகளுக்காகவும் – ஏழைகளின் உயர்வு குறித்தும், விவசாயிகளின் உயர்வு குறித்தும், தொழிலாளர்களின் உயர்வு குறித்தும், பெண்களின் உயர்வு குறித்தும் – உள்ள அனைத்து நல்ல வார்த்தைகளுக்காகவும் முதற்கண் இதனை மிகவும் மெச்சுகிறேன். இதேபோன்று பிரதமர் பேசியிருப்பதையும் நான் மிகவும் மெச்சுகிறேன். ஆனால், பிரச்சனை என்னவென்றால், சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதிருப்பதுதான்.
அழகான சித்திரம்…
பட்ஜெட்டில் பொருளாதாரம் குறித்து ஓர் அழகான சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. அநேகமாக அனைத்துத் துறைகளையும் இணைத்து, எண்ணற்ற திட்டங்கள் குறித்தும் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுகளைத்தான் காணவில்லை.
தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு, மோடிகேர் (Modicare) என்று இதனைப் பாராட்டலாம். ஆனால், இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் இல்லை என்கிறபோது, சென்ற ஆண்டுகளில் தேசிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்திற்குப் பதிலாக, மருத்துவப் பயன்பாட்டிற்காக ஒரு லட்சம் திட்டம் அளித்ததுபோலவே இவையும் ஆகிவிடும். சென்ற ஆண்டு அளித்ததுபோலவே உறுதிமொழி எதுவும் செயல்படுத்தப்படாதவைகளாகிவிடும்.
இவ்வாறு இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளவை அவற்றுக்கான ஒதுக்கீடுகள் இல்லாதபோது, மக்களை வஞ்சிப்பதற்காகக் கூறப்பட்ட வார்த்தைகளாகவே மாறியிருக்கின்றன. இதுவே இந்த பட்ஜெட் குறித்து என்னுடைய பிரதானமான கருத்தாகும்.
இரண்டாவதாக, இந்த பட்ஜெட்டால் ஆதாயம் அடையப்போவதுயார்? யாரிடமிருந்து வரிவருவாயை சேகரிக்க இருக்கிறீர்கள்? குறிப்பாக, இந்த அரசாங்கத்தைமட்டும் குறைகூற விரும்பவில்லை. நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியபின் அனைத்து பட்ஜெட்டுகளுமே இப்படித்தான் அமைந்திருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கையின் பொருளாதார மேலாண்மை என்பது அதுதான். அதாவது மக்களிடமிருந்து வாங்கி, விரல்விட்டு எண்ணக்கூடிய பணம் படைத்தவர்களுக்குச் சேவகம் செய்வது என்பதுதான் நவீன தாராளமயப் பொருளாதாரத்தின் அடிப்படை. அந்த அடிப்படையிலேயே இந்த பட்ஜெட்டும் அமைந்திருக்கிறது.
பொருளாதார சமத்துவமின்மை அதிகரிப்பு
ஊடகங்களும், பல்வேறுவிதமான பொருளாதார மேதைகளும் யாருடைய நலன்களுடன் தங்களை இணைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாகக் கருத்துக்களை முன்வைத்தாலும், உண்மை என்பதை மாற்ற முடியாது. ஒருவிதமான பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதாவது பெரும்பான்மை மக்கள் மிகவும் கொடூரமானமுறையில் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரி வருவாயை விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்கள் வசம் ஒப்படைத்துக்கொண்டிருக்கிறீர்கள். இது இந்த பட்ஜெட்டில் மிகத் தெளிவாகத் தெரிகிறது.
2014இல் நம்முடைய மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருப்பவர்கள், நாட்டின் செல்வவளத்தில் 48 சதவீதத்தைப் பெற்றிருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் அது 58 சதவீதமாக மாறியது. இப்போது, ஆக்ஸ்ஃபாம் அறிக்கையின்படி, அது 73 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கள் 48 சதவீதம் 73 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
வளர்ச்சி விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை எட்டியிருக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் இத்தகைய வளர்ச்சி மக்களை தாங்கமுடியாத அளவிற்கு வறுமையில் தள்ளியிருக்கிறது.
சுமைமேல் சுமை… சலுகைமேல் சலுகை…
இந்த அரசு சமர்ப்பித்த முதல் பட்ஜெட்டிலிருந்தே மக்கள் மீதான சுமைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. முதல் பட்ஜெட்டில் கார்ப்பரேட்டுகளின் நேரடி வரியில் 8,325 கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்தீர்கள். 2015-16 பட்ஜெட்டில் 23,383 கோடி ரூபாய் கூடுதலாக வசூலித்தீர்கள். 2016-17 பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு1,060 கோடி ரூபாய் சலுகை அளித்தீர்கள். அதே சமயத்தில் மக்கள் மீது 20,670 கோடி ரூபாய் அளவிற்குக் கூடுதலாக சுமையை ஏற்படுத்தினீர்கள். நடப்பு பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகளை அளித்திருக்கிறீர்கள். ஆனால் மக்கள் மீது ஏவப்படும் மறைமுக வரியைப் பொறுத்தவரை எந்தவொரு மாற்றத்தையும் செய்திடவில்லை.
மக்கள்மீது சுமைகளுக்கு மேல் சுமையை ஏற்றுகிற அதே சமயத்தில் மக்கள் தொகையில் 1 சதவீதமாக இருக்கிற பணக்காரர்களுக்கு சலுகைகளுக்கு மேல் சலுகைகள் ஏன்? இதனை நேரடி வரி மற்றும் மறைமுக வரி ஆகியவற்றிற்கிடையேயான பொருந்தா நிலை இதனை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.
இவ்வாறு பொருந்தா நிலை இருப்பதுமட்டுமல்ல. அவ்வாறு சலுகைகள் அளித்த பின்னரும்கூட வரிவசூலிக்கும் அமைப்புகள் பணக்காரர்களிடமிருந்து அவர்கள் கட்டவேண்டிய வரிகளை வசூலிக்காமல் இருப்பதையும் பார்க்கிறோம். 2015-16இல் பணக்காரர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகை 5 லட்சம் கோடி ரூபாயாகும். 2016-17இல் 6.5 லட்சம் கோடி ரூபாயாகும். நடப்பு ஆண்டில் 7.31 லட்சம் கோடி ரூபாய்களாகும். பணக்காரர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளித்தபின்னர் வசூலிக்க வேண்டிய தொகை இவைகள். இவற்றைக்கூட இந்த அரசு அவர்களிடமிருந்து வசூலித்திடவில்லை.
இதுமட்டுமின்றி, தாங்கள் அளித்துள்ள பற்று பட்ஜெட்டில் (Receipt Budget), கடந்த மூன்றாண்டுகளில் வசூலிக்கவேண்டிய மதிப்பீட்டு வரி (assessed tax) முறையே 75,000 கோடி ரூபாய், 84,000 கோடி ரூபாய் மற்றும் 1,20,000 கோடி ரூபாயாகும். இதனையும் வசூலித்திடவில்லை.
கறுப்புப் பணம் குறித்து ஏராளமாகப் பேசுகிறோம். இந்தக் கறுப்புப் பணத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் கீழ் உள்ள வரி விதிப்பு நிர்வாகம்தான். உங்கள் ‘இனத்தினருக்கு’ உதவுவதற்கு இது மற்றுமொரு வழியாகும்.
அடுத்ததாக, நீங்கள் ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசியிருக்கிறீர்கள். முதலாவதாக தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்திற்கு வருகிறேன். இதனை நாங்கள் மெச்சுகிறோம். ஆனால் இதுதொடர்பான செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2 சதவீதமாக இருந்தது இப்போது 13 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. உங்கள் மொத்தச் செலவினமும் குறைந்திருக்கிறது.
பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக செலவினத்தைக் குறைத்திருக்கிறீர்கள். மற்றும் மூலதனச் செலவினம் பெரிய அளவில் குறைக்கப்பட்டிருக்கிறது. இது வேலைவாய்ப்பைக் கடுமையாகப் பாதிக்கும்.
உற்பத்தி சார்ந்த நடவடிக்கைகள் விரிவானால்தான் பொருளாதாரம் விரிவடையும். அதனை தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் விரிவாக்கத்தின் மூலம் செய்திடவேண்டும். இவை அனைத்துக்கும் முதலீடு அவசியம். ஆனால் உங்கள் மொத்த மூலதன உருவாக்கமே கீழ்நோக்கிப்பாய்ந்திருக்கிறது. உங்கள் பட்ஜெட்டின் கூர்மையான வீழ்ச்சி அதைத்தான் காட்டுகிறது.
தவறான தகவல் கூறி மக்களை ஏமாற்றாதீர்கள்
அடுத்து, விவசாயத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகிய இரண்டுக்குமான பட்ஜெட் ஒதுக்கீடு சற்றே உயர்த்தப்பட்டு 9,793 கோடி ரூபாயாகி இருக்கிறது. உண்மை ரூபாய் மதிப்பில் இது வீழ்ச்சியாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீத அடிப்படையிலும் இது வீழ்ச்சியாகும். கிராமப்புற வளர்ச்சி, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களுக்கு உங்கள் ஒதுக்கீடு குறைந்திருக்கிறது. இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்? இவ்வாறு விவசாயத்திற்குத்தான் இந்த அரசு முன்னுரிமை அளிப்பதாக நீங்கள் கூறினாலும் நடைமுறையில் மக்களை ஏமாற்றும் விதத்தில் மக்களைக் கசக்கிப்பிழியும் விதத்தில்தான் பட்ஜெட் ஒதுக்கீடுகள் அமைந்துள்ளன.
கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.15 சதவீதத்திலிருந்து 1.08 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சுகாதார செலவினம் 0.32 சதவீதத்திலிருந்து 0.29 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. கல்விக்கான ஒதுக்கீடு 0.49 சதவீதத்திலிருந்து 0.29 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மேலும் ஓர் அதிர்ச்சிதரத்தக்க செய்தியை பட்ஜெட் அளித்திருக்கிறது. சம்பா பயிர்களுக்கு (rabi crops)உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு விலை அரசாங்கம் நிர்ணயம் செய்திருப்பதாக அது கூறுகிறது. அதனைக் குறுவைப் பயிர்களுக்கும்(kharif crops) விரிவாக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இது உண்மையல்ல.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான விவரங்களை உங்கள் முன் தாக்கல் செய்கிறேன்.
2018-19இல் சம்பா பயிர்களுக்கு – அதாவது கோதுமைக்கு உற்பத்திச் செலவினம் மற்றும் அதனுடன் 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்தால், அது ஒரு குவிண்டாலுக்கு 18,084 ரூபாயாகும். ஆனால் உண்மையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை 17,035 ரூபாய் மட்டுமே. பருப்பு (gram) வகைகளுக்கு குவிண்டாலுக்கு 5,289 ரூபாய் வருகிறது. ஆனால் 4,400 ரூபாய்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரியகாந்திக்கு 5,968.50 வருகிறது. ஆனால் கொடுத்திருப்பதோ 4,100 மட்டுமே. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமான விவரங்கள். எனவே தவறான தகவல்களை பட்ஜெட்டில் அளிப்பதைத் தயவுசெய்து தவிருங்கள்.
மக்களை இவ்வாறு கூறி ஏமாற்றாதீர்கள்.விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வருமானம் வீழ்ச்சியடைந்திருப்பதையும், வேலையில்லாமல் அவர்கள் நகரப்பகுதிகளுக்குப் புலம்பெயர்வதையும் பார்க்கிறோம். இப்பிரச்சனையைச் சரிசெய்திட இந்த பட்ஜெட்டில் எதுவுமே செய்யப்படவில்லை. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் தொகைகளை ஒதுக்குவது அதிகரிக்கப்படவில்லை. இத்திட்டத்தின்கீழ் வேலைசெய்த விவசாயத் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு வேலைசெய்ததற்கான ஊதியத்தைக் கொடுக்க முடியாமல் பல மாநில அரசுகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 4,880 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்க வேண்டியிருக்கிறது. அது 321 கோடி ரூபாயாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனை மிகவும் ஆழமாகப் பரிசீலித்திட இந்த அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வேலைவாய்ப்பு
அடுத்து வேலைவாய்ப்பு பிரச்சனை. சுமார் 70 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சிறப்பு ஆய்வுகள் கூறுவதாக பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை தொடர்பான சமீபத்திய விவரங்கள் கூறுவதைப்பார்த்தோமானால், உண்மையில் அது எதிர்மறையாக இருப்பதைக் காண முடியும். தொழிலாளர்கள் அதிகம்உள்ள துறைகளில் 3.46 லட்சம் கோடி வேலைகள் இருப்பதாக அந்த விவரங்கள் கூறுகின்றன.
இது அதிகாரப்பூர்வ அறிக்கை. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகளை இதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 15 ஆயிரம் பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். தனியார் டெலிகாம் துறைகளில் 40 ஆயிரம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள். உற்பத்தி சார்ந்த தொழில்களில் (manufacturing industries) 30 முதல் 35 சதவீதம் வேலையிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை அனுப்பிவைத்திடும் டீம் லீஸ் (Team Lease) நிறுவனம் கூறியிருக்கிறது. அரசாங்கமே தனக்கு வேண்டிய தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களை இந்த டீம் லீஸ் நிறுவனத்திடமிருந்துதான் பெற்றுக் கொண்டிருக்கிறது.
அடுத்து அரசாங்கத்தின்கீழ் உள்ள ஒவ்வொருதுறையும் ஒவ்வொரு புள்ளிவிவரத்தை அளிக்கிறது. நீங்கள் 3.46 லட்சம் கோடி வேலைவாய்ப்பை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் பிரதான் மந்திரி ரோஜ்கர் பிரோத்சகான் யோஜனா 21 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கி இருப்பதாகக் கூறுகிறது. எது உண்மை? எதனை நான் சார்ந்திருப்பது? தயவுசெய்து கூறுங்கள். 3.46 லட்சம் கோடியா? அல்லது 21 லட்சமா? எது சரி?
அடுத்து, நிதியமைச்சர் அவர்கள், 9 லட்சம் கோடி ரூபாய் ஆடை ஆயத்தத் துறைக்கு அளித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அதுஎங்கே சென்று அடைந்திருக்கிறது? எங்கேயும் வேலைவாய்ப்பில்லை. ஆனால் அரசின் கஜானாவிலிருந்து பணம் மட்டும் சென்றிருக்கிறது. பணக்காரர்களுக்குப் பணம் போய்ச் சேர்வதற்கு, நேரடி-மறைமுக வரி ஏற்பாட்டைத் தவிர இது மற்றுமொரு வழியாகும். இவ்வாறு மக்களின் வரிப்பணத்தை தற்போது நாட்டின் செல்வ வளத்தைப் பெற்றிருக்கின்ற ஒரு சதவீதமாக உள்ள பணக்காரர்களுக்கு வாரி வழங்கக்கூடிய மற்றுமொரு வழியாகும். அது 75 சதவீதத்தை எட்டப் போகிறது.
நாட்டில் மொத்தம் உள்ள தொழிலாளர்பிரிவில் 57 சதவீதம் சுயவேலை வாய்ப்பைப் பெற்றிருப்பவர்கள் என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். இவர்களுக்கு முதலீடு எங்கிருந்து உருவாக்கப்படும்? அதனால்தான் பொருளாதார ஆய்வறிக்கையானது வேலைவாய்ப்பில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
அடுத்து, ‘வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்துவது’ என்ற பெயரில் தொழிலாளர் உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறீர்கள். கிட்டத்தட்ட தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பட்ஜெட் உரையில் நிர்ணய கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment) அறிமுகப்படுத்தப் போவதாகவும் கூறியிருக்கிறீர்கள்.
இவ்வாறு உங்கள் நடவடிக்கைகள் அனைத்தின் மூலமாகவும் நாட்டிலுள்ள மக்களை, நுகர்வோராக, சந்தைக்குச் செல்பவர்களாக, தேவையை உருவாக்குபவர்களாக உள்ள மக்களை, வறிய நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரிய அளவில் பாதகமான காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறீர்கள். இவற்றை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு தபன்சென் பேசினார்.
தமிழில்: ச.வீரமணி

Leave a Reply

You must be logged in to post a comment.