சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது மாநில மாநாடு தூத்துக்குடி நகரில் பிப்ரவரி 17ஆம்தேதி துவங்கி 20 தேதி வரை நடைபெற உள்ளது.
மாநாடு மற்றும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ஏ.கே.பத்மநாபன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மாநிலத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிப்ரவரி 20ஆம்தேதி செந்தொண்டர் அணிவகுப்பைத் தொடர்ந்து நடைபெற உள்ள பிரம்மாண்டமான மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கேரள முதல்வருமான பினராயி விஜயன், முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மற்றும் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளன்ர்.
கொடிப்பயணம்
மாநாட்டில் ஏற்றப்படவுள்ள செங்கொடி சென்னையிலிருந்து எடுத்து வரப்படுகிறது. பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா செங்கொடியை எடுத்துக் கொடுத்து சிறப்புரையாற்றுகிறார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.கொடிப் பயணக்குழுவில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் அ.பாக்கியம், ஜி.ஆனந்தன், என்.பாண்டி, எஸ்.பாலசுப்பிரமணியம், பி.சுகந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொடிப்பயணம் பிப்ரவரி 11ஆம்தேதி ஞாயிறன்று தென்சென்னையிலிருந்து துவங்குகிறது. துவக்க நிகழ்வாக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
பிப்ரவரி 12ஆம்தேதி காஞ்சிபுரம், விழுப்புரம் வடக்கு மாவட்டங்கள், 13ஆம்தேதி விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி புறநகர், மாநகர் மாவட்டங்கள், 14ஆம்தேதி திருச்சி, புறநகர், திண்டுக்கல், மதுரை புறநகர் – மதுரை மாநகர், 15ஆம்தேதி மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள், 16ஆம்தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக கொடிப் பயணக்குழு பயணம் செய்கிறது. 16ஆம்தேதி மாநாட்டுத் திடலை கொடிப் பயணக்குழு வந்தடைகிறது. கொடிப் பயணக்குழுவிற்கு அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
வெண்மணி சுடர் பயணம்
வெண்மணி சுடர் பயணக்குழு 14ஆம்தேதி ஞாயிறன்று நாகையிலிருந்து துவங்குகிறது. இந்தப் பயணக்குழுவில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.மாரிமுத்து, எஸ்.கே.பொன்னுத்தாய் மற்றும் நா.பாலசுப்பிரமணியம், ஆர்.மனோகரன், எஸ்.பொன்னுச்சாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.14ஆம்தேதி திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், 15ஆம்தேதி சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும், வெண்மணி சுடர் பயணக்குழு பயணம் மேற்கொள்கிறது. 16ஆம்தேதி மாநாட்டுத் திடலை சுடர் பயணக்குழு வந்தடைகிறது. சுடர் பயணக்குழுவிற்கு அனைத்து இடங்களிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
மாநாடு துவக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தோழர்கள் வி.பி.சிந்தன், கே.முத்தையா நூற்றாண்டு அரங்கில் (ஏவிஎம் கனகவேல் மகால், தூத்துக்குடி). பிப்ரவரி 17 சனிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. இசைநிகழ்ச்சி செந்தொண்டர் அணிவகுப்பு சிறுவர் – சிறுமியர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாநில மாநாட்டு கொடியை பி.இசக்கிமுத்துவும், வெண்மணி தியாகி நினைவுச்சுடரை வி.பழனியும் பெறுகின்றனர். வஉசி நினைவுச் சுடரை இரா.மல்லிகா, பாரதி நினைவுச் சுடரை கே.பொன்ராஜ், தியாகி சங்கரலிங்கனார் நினைவுச்சுடரை தி.குமாரவேல், ஏ.நல்லசிவன், சு.பாலவிநாயகம் நினைவுச்சுடரை தி.சீனிவாசன், டி.ஆர்.சுப்பிரமணியம் நினைவுச்சுடரை ச.ராமகிருஷ்ணன், தியாகிகள் சோமு-செம்மு நினைவுச்சுடரை எஸ்.மோகன்தாஸ், ஆர்.மகாலிங்கம் நினைவுச்சுடரை சு.பன்னீர்செல்வம், கே.எஸ்.அமல்ராஜ் நினைவுச்சுடரை சி.ராமசுப்பு எஸ்.பூவலிங்கம் நினைவுச்சுடரை ம.ஜெயபாண்டியன் ஆகியோர் பெறுகின்றனர்.
மாநாட்டுக் கொடியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வே.மீனாட்சிசுந்தரம் ஏற்றி வைக்கிறார். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு மாநாடு துவங்குகிறது.
மாநாட்டு வரவேற்புகுழு தலைவர் க.கனகராஜ் வரவேற்புரையாற்றுகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
வாழ்த்துரை
மாநாட்டை வாழ்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் எஸ்.குமாரசாமி, எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் எ.ரங்கசாமி ஆகியோர் பேசுகின்றனர்.தொடர்ந்து நடைபெறும் பிரதிநிதிகள் மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் ஸ்தாபன அறிக்கையை சமர்ப்பித்துப் பேசுகிறார்.
மாநாட்டை வாழ்த்தி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஏ.கே.பத்மநாபன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றுகிறார்.வரவேற்புக்குழு செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் நன்றி கூறுகிறார்.
செந்தொண்டர் அணிவகுப்பு
பல்லாயிரக்கணக்கான செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணி வகுப்பு பிப்ரவரி 20 பிற்பகல் 2 மணி அளவில் தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து புறப்படுகிறது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் வஉசி – பாரதி நினைத்திடலில் (மதுரை தேசிய நெடுஞ்சாலை சங்கரப்பேரி விலக்கு) பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமை தாங்குகிறார். மாநிலக்குழு உறுப்பினர் இரா.மல்லிகா வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கேரள மாநில முதல்வருமான பினராயி விஜயன், முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா, மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்பி,. உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன், பி.சம்பத். ஆ,சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, க.கனகராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
கட்சியின் மாநகர செயலாளர் த.ராஜா நன்றி கூறுகிறார்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளை வரவேற்புக்குழு சிறப்பாக செய்து வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.