தூத்துக்குடி,
திருமண வயதில் 2 மகள்களை மனைவியிடம் விட்டுச்சென்ற கணவர் வீடு திரும்பாத அவலம். குடும்பத்தலைவரை இழந்தபிறகு வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தைகளை கரைசேர்க்கப் பரிதவிக்கும் தாய். கடலில் 2 நாட்கள் மரணத்தோடு போராடி கரை சேர்ந்தவருக்கு நிவாரணம் அளிக்காமல் நம்பிக்கை இழக்கச் செய்த அரசின் பாராமுகம். இப்படியாக தூத்துக்குடியில் ஒரே தெருவில் 6 குடும்பங்கள் ஒக்கி புயலின் கொடூரத் தாக்குதலிலிருந்து மீளாத துயரில் மூழ்கிக் கிடக்கின்றன.

தூத்துக்குடி மீனவர் காலனி சர்ச் ரோடைச் சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பில் திறன்பெற்ற மீனவர்கள் அவர்கள். தமிழ்நாட்டு கடலோர காவல்படையின் கெடுபிடிகளை எதிர்கொள்ள முடியாமல் தமிழக எல்லை அருகில் உள்ள கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்கரையிலிருந்து நவம்பர் 28 இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

கேரள மாநிலத்தைச் சேரந்தவருக்கு சொந்தமான அந்த விசைப்படகில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப் (60), கினிஸ்டன் (43), ஜுடு (42), ஜெகன் (43), ரவீந்திரன் (43), பாரத் (18) ஆகிய 6 பேர் தவிர கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த 10 மீனவர்கள் என 16 பேர் ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

நவம்பர் 30 காலையிலேயே கடல் கொந்தளிப்பாக இருந்தது என்றார் உயிர்பிழைத்து வந்துள்ள ஜெகன். உறையவைக்கும் அந்த துயர நிகழ்வை அவரே விவரிக்கிறார். எங்க கூட வந்ததில ஜுடும், பாரத்தும் அப்பா மகன். பாரத்துக்கு இது மொதலும் கடைசியுமான அனுபவமா இருந்துச்சு. முதல் நாள் முழுசா மீன்பிடிச்சோம். அடுத்தநாள் வலய போட்டுட்டு இருந்தோம். காலை பத்து மணி இருக்கும், மேல எழுந்து வந்த பெரிய அலையில எங்க போட்டு கவுந்துபோச்சு. போட்டுக்கு அந்த பக்கம் 8பேரு, இந்த பக்கம் 8 பேரா கடலுக்குள்ள விழுந்து பிரிஞ்சுட்டோம். என் கழுத்தில கயிறு சிக்கியிருந்துச்சு. அத பிரிச்சதில கழுத்து சுளிக்கிப்போச்சு. தண்ணிக்கு மேல 5 லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள பிடிச்சுட்டு மிதந்தோம்.

கொஞ்ச நேரத்துல பாரத்தும், குளச்சல்காரர் ஒருத்தரும் நிறைய கடல் தண்ணிய குடிச்சு தாக்குப்பிடிக்க முடியாம மூழ்கிட்டாங்க. அடுத்தடுத்து இன்னும் 3பேரு கடலுக்குள்ள போயிட்டாங்க. மீதியிருந்த 3 பேரும் கவுந்து கெடந்த வேற படக பிடிச்சுக்கிட்டு மிதந்த 6 பேரோட சேர்ந்துக்கிட்டோம். 9 பேரும் படக தொட்டுக்கிட்டே 2 பகல் 1 இரவுப் பொழுத கடத்தினோம். கை, கால், ஒடம்பு எல்லாம் மரத்துப்போச்சு. யாராலயும் பேச முடியல.
தூரத்தில ஒரு கப்பல் வாரத பாத்தோம். ஒரு சின்ன ஹெலிகாப்டர் வந்துச்சு. அப்பதான் நம்பிக்க வந்துச்சு. கொஞ்ச நேரத்துல வேற ஒரு பெரிய ஹெலிகாப்டர் வந்து எங்க 8 பேர கயித்தப் போட்டு மீட்டாங்க. எங்க போட்டோட ஓட்டுநர் இதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதான் கடலுக்குள்ள மூழ்கினாரு.

திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தப்ப எனக்கு உடம்பில எந்த சொரணயும் இல்ல. தோல் உரிஞ்சு முகமெல்லாம் மரக்கட்ட மாதிரி ஆகிப்போச்சு. ஒருவாரம் அங்க இருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க துணிமணி, 4போர்வ எல்லாம் கொண்டுவந்து குடுத்தாங்க. ஆஸ்பத்திரில நல்லா கவனிச்சாங்க. வீட்டுலேந்து வந்து தூத்துக்குடி ஆஸ்பத்திரில வச்சு 10 நாள் பாத்தாங்க. அதிகாரிங்க எல்லாம் வந்து பாத்துட்டு 50 ஆயிரம் ரூபா தர்றதா சொல்லி ஆதார், கையெழுத்தெல்லாம் வாங்கினாங்க. இதுவரைக்கும் எந்த உதவியும் கெடைக்கல. என்கூட திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில இருந்த குளச்சல்காரங்களுக்கு 50 ஆயிரம் ரூபா குடுத்திருக்காங்க என்றார். வேலக்கும் போக முடியாம கெடந்து தவிக்கிதாவ என்றார் 2 குழந்தைகளுடன் அருகில் நின்ற அவரது மனைவி பவித்ரா.

சடலம் கிடைத்த கினிஸ்டன், ஜுடு ஆகியோரது குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூவரது இறப்பை கண்கூடாக பார்த்த சாட்சியத்தை ஜெகன் அளித்துள்ளார். ஆனாலும் அரசு நடைமுறைக்கு உதவாத சட்டவிதிகளைக் கூறி காலம் கடத்துவதாக கூறுகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் ராஜா.

டிஎன்ஏ பரிசோதனைக்கும், அதன் மூலம் 2 சடலங்களை உறுதி செய்த உடன் கோழிக்கோடு சென்று அவற்றை பெற்று வரவும் தங்களோடு 2வார காலம் காத்துக்கிடந்து ராஜா செய்த உதவிகளை கினிஸ்டனின் மனைவி ஜெயந்தி நன்றியோடு நினைவு கூர்ந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த போது அவர் கூறிய ஆறுதலும் உதவிகளும் மறக்க முடியாதவை என 6 குடும்பத்தினரும் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.  பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிபிஎம் மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேச கேரள முதல்வர் தூத்துக்குடி வருவதாக கூறியதும் ‘நாங்கள் குடும்பத்தோடு அவரைப்பார்க்க வருகிறோம்’ என்றார்கள் ஆர்வத்துடன்.

ஒரே குடும்பத்தில் மூவரை விழுங்கிய கடல்

கடலுக்குள் மூழ்கி காணாமல் போன ஜோசப்பின் மனைவி சேசுராணியுடன் அவரது மகள் பவித்ரா மற்றும் 15, 16 வயதுடைய 2 பேத்திகளுடன் வசித்து வருகிறார். ஆண்துணையில்லாத, வருவாய் இல்லாத தாயும் மகளும் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதா? வேலைக்கு அனுப்புவதா என்கிற குழப்பத்தில் உள்ளனர். சேசுராணியின் கணவர், மாமனார், தந்தை என கடந்த சில ஆண்டுகளில் மூவரும் கடலுக்குள் காணாமல் போனவர்கள். ஆனாலும் இதுவரை இவர்களுக்கு நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை.

கடல் விழுங்கிய ரவீந்திரனின் மகள் ராஷ்மி (21) பிஎஸ்சி பட்டதாரி, மற்றொரு மகள் மேனகா (23) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் சிபாரிசில் இவர்களுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் கிடைத்த வேலையில் 2 நாட்கள்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. தாயார் விருச்சிதா வீட்டு வேலை செய்து சம்பாதிக்கும் 3 ஆயிரம் ரூபாயில்தான் குடும்பம் உயிர்வாழ்கிறது. இயற்கையின் சீற்றத்தால் வாழ்வாதாரம் முற்றாக சிதைந்து போன குடும்பங்களுக்கு உதவ தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையாகும்.

  • – சி.முருகேசன்

Leave A Reply

%d bloggers like this: