குர்கான்:
‘ஆதார்’ இல்லை என்று கூறி சிகிச்சை மறுக்கப்பட்டதால், கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையைப் பெற்றெடுத்த கொடுமை நிகழ்ந்துள்ளது.
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திலுள்ள குர்கான் அரசு மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.ஹரியானா மாநிலம், குர்கானைச் சேர்ந்தவர் அருண் கேவாத். இவரது மனைவி முன்னி கேவத். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவ வலி வந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக, குர்கான் அரசு மருத்துமனைக்குச் சென்றுள்ளார். அப்போது வலியால் அவர் துடித்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த ஊழியர்கள், முன்னி கேவாத்தை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டுமானால், ஆதார் அட்டை நகல் வேண்டும் என்று கூறியுள்ளனர். தங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்ற தகவலை முன்னி கேவாத்தின் கணவர் கூறியுள்ளார். மேலும், வலியால் துடிக்கும் தனது மனைவிக்கு தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளியுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார்.

ஆனால், ஆதார் அட்டை நகல் தந்தால் மட்டுமே, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்போம் என்று மருத்துவர்களும் ஊழியர்களும் பிடிவாதமாக இருந்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு இடையே, மருத்துவமனை வளாகத்திலேயே முன்னி கேவாத் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்போதும் கூட மருத்துவர்கள், முன்னி கேவாத்தைப் பார்க்கவோ, அவருக்கு சிகிச்சை அளிக்கவோ முன்வராமல் இருந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த கர்ப்பிணிப் பெண் முன்னி கேவாத்தின் உறவினர்கள், அரசு மருத்துவமனை அதிகாரிகளைக் கண்டித்து, மருத்துவமனை முன்பே போராட்டத்தில் இறங்கினர். ஆதார் அட்டைக் கேட்பதற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையடுத்து, அங்கு வந்த மருத்துவமனை முதன்மை அதிகாரி பி.கே. ரஜோரா “முன்னி கேவாத்திற்கு சிகிச்சை அளிக்கப்படாதது குறித்து உள்விசாரணை நடைபெறுவதாகவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் உறுதியளித்து போராட்டத்தைக் கைவிடச் செய்தார்.

சம்பவத்திற்கு காரணமான அரசு மருத்துவர் மற்றும் செவிலியரை தற்காலிக பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.எனினும் ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க மறுத்தது, ஹரியானா மாநிலத்தில் பரபரப்பான சம்பவமாக மாறியது.

Leave A Reply

%d bloggers like this: