புதுதில்லி:
குழந்தைகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 9) குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறார்கள் சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது.இந்த வழக்கு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மதன் பி. லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தார். அப்போது, “அனைத்து மாநிலங்களிலும் சிறார் சீர்திருத்த நீதிமன்றம் மற்றும் சிறார் நலன்புரிக் குழுக்களில் உள்ள பதவிகளை துரிதமாகப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சிறார் நீதிபதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) 2015 சட்டத்தைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தங்களின் சொந்த முயற்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் பதிவு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
மேலும், “சிறார் சீர்திருத்தப் பள்ளிகளில், அவர்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் முறையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்; குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் குழந்தைநல வாரியம் அமைக்கப்பட வேண்டும்” என்றும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.