தூத்துக்குடி:                                                                                                                                                                                   ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்களை சிதைக்கும் முயற்சியில் சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 22ஆவது மாநாடு பிப்.17-20 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. அதையொட்டி இன்று தூத்துக்குடியில் மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம் நடைபெற்றது.
 சு.வெங்கடேசன் :
பிப்ரவரி 4இல் இந்து கோவில்கள் மீட்பு மாநாடு நடைபெற்றது. பிப்.2இல் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தீப்பிடிக்கிறது. தீப்பிடித்த அரை மணி நேரத்தில் பேனருடன் வந்து பாரத் மாதாக்கீ ஜே என்று முழக்கிடுகிறார்கள். மறுநாள் மாவட்ட ஆட்சியர் பெயரில் நாளிழ்களுக்கு அவருக்கு தெரியாமலே தீப்பிடித்தது குறித்த செய்திக்குறிப்பு அனுப்பப்படுகிறது. இதில் எது தற்செயல், எது திட்டமிட்டது என்றே அறிந்துகொள்ள முடியாது குழப்பம் மக்களுக்கு ஏற்படுகிறது. ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய தகவலுக்காக விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் கண்ணீர் வடித்து கதறிய வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியானது. அடுத்த 6ஆவது நாள் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்படுகிறது. அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் அழுதாரா? அழுததால் பரிந்துரைக்கப்பட்டாரா? இது திட்டமிட்ட சூழ்ச்சியின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பதற்றம்.வைணவர்களால் சமணர்கள் கொல்லப்பட்டது உள்ளிட்ட வரலாற்றுப்பதிவுகளில் உண்மை இல்லை என புத்தகம் வெளியிட்டிருப்பவர் மாசாமி. இவர் அதோடு நிற்கவில்லை பிராமண வைணவர்களை விட சூத்திர வைணவர்கள் உயர்ந்தவர்கள் என ராமானுஜர் கூறவில்லை எனவும் எழுதியிருக்கிறார். உண்மையில் தவறான வரலாற்றை எழுதியிருக்கும் இவருக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். ஆனால் மத்திய அரசு இவருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. எது திட்டமிட்டது எது தற்செயல் என்பதை அறிய முடியாத குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் பாசிச செயல்திட்டம். இவர்களது அக்கறை ஆன்மீகம் சம்மந்தமானது அல்ல இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இந்துத்துத்துவா செயல்பாட்டுத் தளங்களாக மாற்றுவதற்கான முயற்சி. அதற்காக ஆயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள சீர்திருத்தங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பார்க்கிறார்கள்.
பாலபிரஜாபதி அடிகள்:
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி கடலுக்குள் உயிரிழந்த போது, கேரள மாநிலத்தில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கியது அங்குள்ள கம்யூனிஸ்ட் பினராயி விஜயன் அரசு. அதன் பிறகு வேறு வழியில்லாமல் தமிழக அரசும் அறிவித்தது. இது வரை இல்லாத அளவுக்கு இந்த நிவாரணம் கன்னியாகுமரி மீனவர்களுக்கு கிடைக்க வழிகாட்டியது கேரள அரசு.கொத்தைக் குறைக்காதே, குறை மரக்கால் வைக்காதே என்று உழைப்பாளிகளுக்கான உரிமைக்குரல் எழுப்பி இடதுசாரிக் கருத்தை கூறியவர் அய்யா வைகுண்டர். அதனால் தான் கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு அய்யா வைகுண்டருக்கு ஒரு கோடி ரூபாயில் மணிமண்டபம் கட்ட முடிவு செய்து நிலத்தையும் ஒதுக்கியுள்ளது. மதங்களை கடந்த மனிதநேயம் என்கிற தலைப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. மதங்களைக் கடந்தால் தான் மனிதநேயம் ஏற்படும். அடுத்த மதத்தை மதிக்கிறவர்களிடம் மனிதநேயம் இருக்கும்.
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் பிறந்த வைகுண்டல் சாதியை பேய் என்றார். நான் எவன் காலடியிலும் அமர மாட்டேன் என்ற கூறினார். தேடுங்கால் தெய்வம் ஒன்றெனக் கண்டேன் என்றார் அய்யா. நாராயணகுரு கூறுவார் “மதம் ஏதாகிலும், மனுஷர் நந்நாயிருக்கட்டே“ என்று. பனை மரம் இனிமையான பதநீரைத்தான் தரும். அதை கள்ளாக மாற்றி போதை ஊட்டுவதுபோல் மதவெறி ஊட்டப்படுகிறது. அவர்கள் இந்த நாட்டில் மநுதர்மம் என்கிற அதர்மநூலை போற்றுகிறார்கள். நாங்கள் பின்பற்றும் இந்து மதம் என்பது மநுதர்மத்தின் அடிப்படையிலானது அல்ல. லெமுரியா கண்டத்து வாழந்த மக்கள் கடைப்பிடித்த மரபு. அய்யா வைகுண்டர் அவதரித்த இடத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்பதை கேரளத்தில் பினராயி விஜயன் அரசு சாதித்து காட்டியிருக்கிறது. அதன் மூலம் அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குள் செல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழக கோவில்களிலும் அத்தகைய நிலை ஏற்பட வேண்டும். கேரள மாநிலத்தில் பள்ளித் தேர்வில் தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விக்காக அந்த அரசு வருத்தம் தெரிவித்ததோடு முழு மதிப்பெண்களை மாணவர்களுக்க வழங்க உத்தரவிட்டுள்ளது. மற்றொரு காமராஜராக காட்சி தரும் பினராயி விஜயனை தமிழ்நாடு முழுவதும் அழைத்துச் செல்லுங்கள்.
எனது ஆன்மீக கடமை சமயம் கடந்து மனித நேயம் காக்க வேண்டும் என்பதுதான். சுவாமி விவேகானந்தர் 5 இளைஞர்களை கேட்டார். இங்கே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொண்ட டிஒய்எப்ஐ இருக்கிறது. இந்த இளைஞரகள்தான் எதிர்கால நம்பிக்கை. நீ்ங்கள் எழுந்தால்தான் இந்த தேசம் எழும்.
அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி) :
இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை கட்டமைத்து அரசியல் நடத்தப்படுகிறது. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ் இல்லாத சங்பரிவார் இல்லா இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்.இந்த நாட்டில் சாதிய அடுக்குகலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள எங்களது முன்னோர்கள் கிறிஸ்துவனாக, முஸ்லீமாக மாறினார்கள். ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் நடத்திய புரட்சிதான் அது. என்னுடைய முற்பாட்டன் தமிழன், நானும் தமிழன். கைபர் கணவாய் வழியாக ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தவர்கள் அல்ல நாங்கள்.
சுகேஷ் சந்தியா:
இந்துத்துவாதிகள் கம்யூனிஸ்ட்டுகளை பார்த்து பயப்படுகிறார்கள். 3 மாநிலங்களில் மட்டும் வலுவான அமைப்பாக உள்ள அவர்கள் இந்துத்துவவாதிகளுக்கு எதிராக நாடுமுழுவதும் வலுவாக குரல் எழுப்புகிறார்கள். 1800 ஆம் ஆண்டுகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள் என்றால் அதற்கான சமூக காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். விஜயநகர பேரரசு தூத்துக்குடியில் வெட்டுப்பெருமாள் தலைமையில் படைகளை அனுப்பி தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து தப்பி கடலுக்குள் இருந்த திட்டுகளில் தவித்த மக்களுக்கு ஆங்கிலேயரான பிரான்சிஸ் சவேரியார் தண்ணீர் கொடுத்து காப்பாற்றினார். இது போல் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் நடந்துள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மக்கள் அணிதிரண்டனர். கிறிஸ்தவமும், அய்யா வைகுண்டரும் அவர்களுக்கு துணை நின்றது வரலாறு. 1935இல் அம்பேத்கர் கூறினார் “நான் இந்துவாக பிறந்தேன். இந்துவாக சாகமாட்டேன்” என்று. பின்னர் அவர் புத்த மதத்தை தழுவினார்.மார்க்சியமும், பெரியாரியமும், அம்பேத்கரியமும் இணைந்து பணியாற்ற வேண்டியது இன்று சமூகத்திற்கு தேவை. அந்த அடிப்படையிலான பகுப்பாய்வை முன்னெடுக்க வேண்டும். இந்த உலகத்தில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மார்க்ஸ் தேவைப்படுவார். நாங்கள் திராவிட இயக்கங்களின் பின்னால் பல நேரங்களில் சென்றதுண்டு. இன்று அனைத்து நம்பிக்கையாளர்களையும் ஒருங்கிணைக்க கம்யூனிஸ்ட்டுகள்  முன்வரவேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.