தமிழகத்திற்கு மின்சாரப்பற்றாக்குறை எவ்வளவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே யோசிப்பது அவசியம். மின்சாரம் தேவைப்படும் பொழுது அன்றைக்கு சென்று திடீரென்று  எதையும் செய்துவிடமுடியாது. தமிழக வளர்ச்சிக்கு மின்சாரம் அவசியம் என உணர்ந்த ஆட்சியாளர்கள் கடந்த 50 வருட காலத்தில் ஏற்படுத்திய மின்உற்பத்தியானது தேவையை ஒட்டி அமைக்கப்படவில்லை. அதன் விளைவை தமிழகம் 2008 ஆம் ஆண்டு சந்தித்தது. அது மிகப்பெரிய அளவிற்கு மின்பற்றாக்குறை இருந்த நேரம். தமிழக ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டபோது மின்திட்டங்கள் இல்லை. அப்போது பல்வேறு மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இந்த உடன்குடி திட்டத்துக்கு அன்றைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரால் துவக்கவிழா நடத்தப்பட்டது.

பெல் நிறுவனமும் மின்வாரியமும் இணைந்து புதிய நிறுவனம் துவக்கி உடன்குடி பவர் கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 65 கோடி ரூபாய் அளவிற்கு பங்கு போட்டு இரண்டு 800 மெகாவாட் மின்நிலையம் அமைக்க பணிகள் நடந்தன. அடுத்து 2011 இல் அதிமுக ஆட்சி வந்தது. திமுக ஆட்சியின் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சுற்றுப்புறச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்று பெல் நிறுவனத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, இரண்டு 660 மெகாவாட் மின்நிலையத்திற்கான மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான விழா 2012 இல் எடுக்கப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அம்மின்நிலையத்தை கட்டுவதற்கு REC மூலம் (கிராமிய மின்நிதி நிறுவனம்) நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் அதற்கான கட்டுமானப் பணிகளை செய்வதற்கு பெல் நிறுவனத்திற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இம்மின்நிலையம் உடன்குடியில் அமைவதால் தமிழகம் தன்னிறைவு பெறும் என்றும் இனிமேல் தமிழகம் மிகைமின் மாநிலம் ஆகிவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மின் திட்டம் துவங்குவதற்கு முன்னாலேயே மிகைமின் மாநிலம் ஆகிவிட்டது என்று விளம்பரம் செய்து கொண்டு இருந்ததையும் நாம் கேட்டிருந்தோம்.

தமிழக மின் உற்பத்தி 2010 ஆம் ஆண்டில் 16 ஆயிரம் மெகாவாட் ஆக இருந்தது. தற்போது 29 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யும் மாநிலம் ஆக உயர்ந்து உள்ளது என்று அமைச்சர் தெரிவிக்கின்றார். இந்த உயர்வில்  அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னால் அதாவது  2011க்குப்பின் 2018 ஆண்டு வரை 7 ஆண்டுகளில் அதன்  பங்கு என்ன? ஒரு மெகாவாட்  மின்சாரம் கூட உற்பத்தி செய்வதற்கான மின்நிலையம் அமைக்கப்படவில்லை. அதனால் வாரியத்தின் மின் உற்பத்தி 7 ஆயிரம் மெகாவாட் என்றால் தனியார் மின்உற்பத்தி 16,571 மெகாவாட் ஆக உள்ளது.

 2012 ஆம் ஆண்டில் மின்உற்பத்தி துவங்கிய மின் நிலையங்கள் எல்லாம் 2008 ஆம் ஆண்டில் கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டவை ஆகும். மேட்டூர் 600 மெகாவாட், வடசென்னை 2×600 மெகாவாட் வல்லூர் அனல் மின்நிலையம் 3 x500 தூத்துக்குடி 2×500 NPPL, கூடங்குளம் அணு மின்நிலையம் 2×1000 மெகாவாட் என்பவைகளாகும். இதில் 1800 மெகாவாட் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு – டான் ஜெட்கோவிற்கு சொந்தமானது. மீதி (4500 மெகாவாட்) மத்திய தொகுப்பிற்கு சொந்தம் ஆகும். இதற்குப் பின்னர் அறிவித்த எந்த திட்டமும் உற்பத்திக்கு வரவில்லை.

உடன்குடி மின்நிலையம் துவக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆன பின்னால் தற்போது அதே நிலையில் கட்டுமானப்பணி துவக்கப்படும்பொழுது கட்டுமானச் செலவுகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் உயர்ந்து 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கூடுதல் ஆக 3 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துவிட்டது. இப்படி காலதாமதம் செய்து கட்டுமானப்பணிகள் துவங்குவதினால் மின்வாரியத்திற்கு ஏதேனும் லாபம் உண்டா? காலத்தே துவங்கியதை அமல்படுத்தி இருந்தால் வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்கப்பட்டு இருக்கும்.வாரியம் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் 3600 மெகாவாட் வரைக்கும் மின்சாரத்தை இப்போதும் வாங்கி வருகின்றது. வாங்கும் மின்சாரத்தின் விலை மின்வாரியத்தின்மூலம் உற்பத்தி ஆகும் மின்சாரவிலையைவிட குறைவாக உள்ளதா என்றால் அதுவும் இல்லை. அப்படி இருக்க மின்வாரியத்தின் அனல்மின்நிலையங்களின் மின் உற்பத்தியை ஏன் குறைக்கவேண்டும் அல்லது நிறுத்தவேண்டும்.

தூத்துக்குடி மின்நிலையம் மற்றும் வடசென்னை அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்படுகின்றது. மின்நிலையத்தில் முழுமையான அளவில் மின் உற்பத்தி செய்தால் உள் உபகரணங்கள் இயங்குவதற்கு மின்சாரம் செலவு ஆகும். மின்சாரம் குறைத்து உற்பத்தி செய்தாலும் அதே அளவிற்கே உபகரணங்களுக்கான மின்சாரம் செலவாகும். இதுவும் ஒரு வகை நட்டம்தானே!

இப்பொழுது கட்டுமானத்தில் உள்ள ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை கட்டி முடித்தாலே தமிழகத்தின் மின்தேவை பூர்த்தியாகிவிடும். ஆனால் அனல் மின்நிலையம் கட்ட மக்களின் நிலம் எடுக்கப்பட்டது. முதலீடு செய்யப்பட்டது. முதலீட்டிற்கு வட்டி செலுத்தப்படுகின்றது. நிலக்கரி எரிவதால் சுற்றுப்புறச்சூழல் கெடுகின்றது. இப்படி பல இழப்புகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் ஒரு மின்நிலையத்தில் முழுமையான உற்பத்தியை செய்யவிடவில்லை என்றால் புதிய மின்நிலையங்கள் அமைப்பது எதற்காக?

அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு கட்டணத்தை ஒரு ரூபாய் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு உயர்த்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புவிவெப்பமயமாகுதல் காரணத்தினால் நிலக்கரி பயன்பாட்டிற்குண்டான வரியாக இதை வசூலிக்கப்போகிறது.

ஒரு லட்சம் மெகாவாட்அளவிற்கு புதுப்பித்தல் மின்சாரம் உற்பத்தி செய்திடவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சாரம்  வீரியமான மின்சாரமாக இல்லை என்றாலும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது அரசின் முடிவாக உள்ளது. இப்படி இருக்கையில் தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி அனைத்தும்  தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மூலம்மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு யூனிட் மின்சாரம் ரூ.7.01 க்கு வாங்க அதானியிடம் ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. காற்றாலை மின்சாரம் ,கழிவுகளிலிருந்து மின்உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மின்சாரம் முழுவதும் தனியார் தான் செய்கின்றார்கள். புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முதலீட்டை தமிழக அரசு ஏன் செய்யமறுக்கிறது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை மட்டும் தனியாரிடம் அளித்துவிட்டு அனல் மின்நிலையங்களை மட்டும் அரசு செய்வதன் நோக்கம் என்ன? அரசின் முதலீட்டை செய்து அனல் மின்நிலையங்களை மூடி வைப்பதில் என்ன பிரயோஜனம்?

எண்ணூர் கடற்கரையோரத்தில், தூத்துக்குடி கடற்கரையோரத்தில் இந்த அனல் மின்நிலையங்கள் அமைந்துள்ளதால் எத்தனை விதமான பாதிப்புகள் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்படுகிறது என அரசு ஏன் சிந்திக்க மறுக்கின்றது?

சாம்பலினால் காற்று மாசு ஆகிறது.சாம்பலை சேமிப்பதால் நிலத்தடி நீர் பாழாகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளகடற்கரையோரத்தில் அமைந்துள்ள அனல்மின்நிலையங்கள் கொசஸ்தலை ஆற்றின் அகலத்தை குறைத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு நிறுவப்பட்ட மின்நிலையங்களில் அடிக்கடி  உற்பத்தியை நிறுத்தி விடுகிறார்கள்.

இந்நிலையில்  மேலும் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் உடன்குடி திட்டம் கொண்டு வருவதால் என்ன பயன் ஏற்படப்போகின்றது. எண்ணூர் அனல் மின்நிலையம் அருகில்  கட்டுமானத்தில் உள்ள மின்நிலையத்தின் கட்டுமானப்பணியை திவாலாகப்போகும் லேன்கோ நிறுவனத்திடம் 2014 ஆம் ஆண்டில் ஒப்படைத்த காரணத்தினால் 17 சதவீத வேலைகள் மட்டுமே முடிந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கிடைத்த மின்வாரியத்தின் பதிலால் அறிய முடிகிறது. இந்த மின்நிலையம் மின் உற்பத்திக்கு வரவேண்டிய நாள் 14.01.2018 ஆகும். ஆனால் லேன்கோ நிறுவனம் திவாலாகிவிட்டதால் கட்டுமானப்பணி நின்றுவிட்டது. அந்த கட்டுமானப்பணியை முடிப்பதற்கு எந்தவித ஏற்பாடும் தமிழக அரசால் செய்யப்படவில்லை.

தமிழக கடற்கரையோரம் முழுவதும் அனல்மின்நிலையங்கள் கட்டுவதனால் மட்டும் தமிழகம் வளர்ச்சி கண்டுவிடாது. தற்போது உள்ள மின் உற்பத்திக்கே எந்தவிதமான தொழில் வளர்ச்சியும் அதிகமாகவில்லை. இந்நிலையில் தமிழகத்தின் சுற்றுப்புறச்சூழலையும் பாதுகாக்க வேண்டுமென்றால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள அனல் மின்நிலையங்களில் முழுமையாக மின்உற்பத்தி செய்வது அவசியம். அதே போன்று புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அரசு முதலீடு செய்து உற்பத்தி செய்வதால் மின்துறையை பாதுகாக்கமுடியும்.

இப்பொழுது காற்றாலை மின்சாரம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.40 காசு ஆக குறைந்துவிட்டது. காற்று வீசும் காலத்தை கணக்கிடுவதற்கு கருவிகளும் கண்டுபிடித்த நிலையில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் அது இல்லாத காலங்களில் அனல் மின்நிலையத்தின் உற்பத்தியை பயன்படுத்திக்கொள்வதும் பருவ காலங்களில் நீர் மின்உற்பத்தி நிலையங்களை பயன்படுத்தும் ஏற்பாடும் இருந்தால் தமிழகம் ஒரு முன் மாதிரி மாநிலமாக மாறும். அதனால் உடன்குடி மின்நிலையத்திற்கு செலவிடும் தொகையினை புதுப்பிக்கத்தக்க மின்நிலையத்திற்கு திருப்பலாமே. இப்படி எல்லாம் யோசிப்பதற்கு அதிமுகவிற்கு ஏது நேரம்?

  • கட்டுரையாளர் : கே.விஜயன், சிஐடியு மாநில துணைத்தலைவர்

Leave a Reply

You must be logged in to post a comment.