லக்னோ:
பட்டாலியன் போலீஸ் படையினர், தங்கள் குடியிருப்புகளில் கட்டாயமாக மாட்டுக்கொட்டம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பாஜக முதல்வர் ஆதித்யநாத் அதிரடி உத்தரவு போட்டுள்ளார்.
பட்டாலியன் குடியிருப்புகளில் பள்ளிக்கூடங்கள் நடத்தும்போது, கொட்டம் அமைத்து மாடுகளை மட்டும் வளர்க்க முடியாதோ? என்று கேள்வியெழுப்பி போலீசாரை அவர் திகிலடிக்கச் செய்துள்ளார்.1940-இல் இந்தியாவில் ஆயுதம் தாங்கிய பட்டாலியன் போலீஸ் படை உருவாக்கப்பட்டது. போலீஸூக்கு துணையாக அவசரக் காலங்களில் உதவ இந்தப் படை அமைக்கப்பட்டது. எந்நேரமும் இவர்களுக்கான வேலை வரலாம் என்ற நிலையில், இவர்களின் குடும்பத்தினருக்காக தனி குடியிருப்புகளும், அங்கேயே அவர்களின் குழந்தைகளுக்காக பள்ளி வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், பட்டாலியன் குடியிருப்புகளில், பள்ளிகள் இருப்பதைப் போல இனி மாட்டுத்தொழுவங்களும் இருக்க வேண்டும் என்று ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக ஆதித்யநாத்தின் யோசனை, அரசு மூலம் சில நாட்களுக்கு முன் பட்டாலியன் படைக்கு அனுப்பப்பட்டது. அதில் “பசுக்களைப் பாதுகாக்க நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம்; ஆகவே உங்கள் கட்டடத்திற்குள் மாட்டுத்தொழுவம் அமைக்க இடம் கொடுக்க வேண்டும்” என்று கேட்கப்பட்டிருந்தது. எங்கெல்லாம் பட்டாலியன் குடியிருப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் மாட்டுத் தொழுவத்தை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பட்டாலியன் குடியிருப்பு இயக்குநராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ராஜிவ் குப்தா இதற்கு அனுமதி அளிக்கவில்லை. பட்டாலியன் குடியிருப்புப் பகுதிகளில் மாட்டுத்தொழுவம் நடத்துவது கஷ்டம் என்று தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் இருக்கும் பட்டாலியன் படைக்கு நிறைய வேலை இருக்கிறது; அதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.ஆனால், அதை ஏற்காத ஆதித்யநாத் அரசானது, மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. “பட்டாலியன் படையின் குடியிருப்பில் பள்ளிகள் இயங்கி வருகிறது. பள்ளிகளை இயக்க நேரம் இருக்கும் போது மாட்டுத்தொழுவமும் நடத்தலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
அப்போதும் பட்டாலியன் அதிகாரிகள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “பட்டாலியன் குடியிருப்புகளில் இடம் இருக்கிறது என்றால் சிறையிலும் கூட நிறைய இடம் இருக்கிறதே அங்கும் திறக்கலாமே” என்று எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், பட்டாலியன் அதிகாரிகள் எதிர்பாராத வகையில், “போன வாரமே கிட்னிய எடுத்தாச்சு” என்ற வடிவேலு-வின் காமெடி கதையாக, “சிறையிலும் மாட்டுத் தொழுவம் அமைக்க முன்பே முடிவு செய்து விட்டோம்; சிறை அதிகாரிகளும் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார்கள்; முதற்கட்டமாக 12 சிறைகளில் மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட இருக்கிறது; இதை அங்கு இருக்கும் கைதிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது” என்று கூறி ஆதித்யநாத் அரசு அதிர்ச்சி அளித்துள்ளது.“மாடுகளின் நன்மைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றும் முத்தாய்ப்பாக ஆதித்யநாத் அரசு கடிதத்தை முடித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.