திருப்பூர், பிப்.8-
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளி வியாபாரிகள் தரப்பில் குறைக்கப்பட்ட விசைத்தறி நெசவு ஒப்பந்தக் கூலியை மீண்டும் உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை தொடங்கியது. 2011 ஆம் ஆண்டு இருந்த கூலியில் சோமனூர் ரகத்திற்கு 30 சதவிகிதமும், இதர ரகங்களுக்கு 21 சதவிகமும் அதிகப்படுத்தி 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை சில மாதங்கள் மட்டும் அமல்படுத்திய ஜவுளி வியாபாரிகள் பின்னர் கைவிட்டு விட்டனர். பழைய கூலியையே கொடுத்தனர். இதனால் அதிருப்தி அடைந்த விசைத்
தறி உரிமையாளர்கள் ஒப்பந்த கூலியை வழங்க வலியுறுத்தியதுடன், அரசு நிர்வாகத்திடமும் முறையிட்டனர். பல கட்டப் போராட்டங்கள் நடத்தினர். எனினும் ஜவுளி வியாபாரிகள் குறைத்த கூலியை உயர்த்தி தர முன்வரவில்லை. இந்நிலையில் மீண்டும் விசைத்தறியாளர்கள் கூடிப் பேசி ஒப்பந்தக் கூலியைக் கொடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். அரசு நிர்வாகத்திடமும் முறையிட்டனர்.இதன் தொடர்ச்சியாக இருதரப்பு பேச்சுவார்த்தை வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இதில் ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும், விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர். எனினும் இதில் உரிய முடிவு காணப்படவில்லை. மீண்டும் வெள்ளிக்கிழமை (இன்று) கோவையில் உள்ள தொழிலாளார் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.