மோகனூர், பிப்.8-
மோகனூரில் பேரூராட்சியில் எவ்வித காரணமும் இன்றி நிறுத்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் தற்காலிக பணியாளர்களாக 21 திடக்கழிவு துப்புரவு பணியாளர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் குறிப்பிட்ட பணியாளர்களுக்கு மட்டும்
வேலை இல்லை என மோகனூர் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத் தொகையையும் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இச்சூழலில் பேரூராட்சி நிர்வாகம் வெளிநபர்களிடம் பணம் பெற்றுக்
கொண்டு புதியதாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் தலைமையில் வியாழனன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.ஜி.ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வி.கண்ணன் துவக்கவுரை ஆற்றினார். சங்க மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசன், குமாராபாளையம் நகர செயலாளர் கே.பாலுசாமி, சிஐடியு மாவட்ட உதவி தலைவர் கு.சிவராஜ் கண்டன உரையாற்றினர். முடிவில், சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி நிறைவுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்புரவு தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: