திருப்பூர், பிப்.8 –
தில்லியில் மர்ம முறையில் மரணமடைந்த திருப்பூர் மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருப்பதால் உண்மையைக் கண்டறிய தொடர் சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாக சரத்பிரபுவின் தந்தை கூறியுள்ளார்.

திருப்பூர், பாரப்பாளையம் பி.செல்வமணியின் மகன் சரத் பிரபு (24). தில்லி யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் (யுசிஎம்எஸ்) மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) படிப்பில், கடந்தாண்டு சேர்ந்து படித்து வந்தார். அருகாமையில் குடியிருப்பில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார். கடந்த ஜனவரி 17-ஆம் தேதி காலை மர்மமான முறையில் உயிரிழந்தார். தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவர் படித்த கல்லூரியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரத உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் தில்லியிலிருந்து விமானம் மூலமாக கொண்டு வரப்பட்டு, திருப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர் சரத் பிரபுவின் தலையில் காயமும், கழுத்தின் இடது பக்கத்திலும், கையிலும் தழும்புகள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்ககூடும் என்று பலத்த சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை தில்லியில் செல்வமணியின் வழக்கறிஞரிடம் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர். இந்த பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து சரத் பிரபுவின் தந்தை செல்வமணி கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மகனின் உடலில் காயங்கள் இருந்ததற்கான காரணங்கள் குறித்து எவ்வித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை, அது குறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்து விட்டு தகவல் அளிப்பதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். தில்லியில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்திலிருந்து இதற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து சரத் பிரபுவின் உறவினர்களிடம் கேட்டபோது, இவ்விவகாரத்தில் உடனிருந்த இருவரும் இதுவரை வெளிப்படையாக கருத்துகளைத் தெரிவிக்கவில்லை. சரத் பிரபுவின் கையில் ஊசி பேடும்போது நிச்சயமாக அவர் பலமாக சத்தம் போட்டிருப்பார் என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், தங்களுக்குத் தெரியாது என்கின்றனர். இவ்விவகாரத்தில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர தொடர் சட்டப்பேராட்டத்தை நடத்துவோம் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.