திருப்பூர் , பிப். 8-
திருப்பூர் அருகே திருமணமான இரண்டு மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன்நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெய்சிங். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்த பண்டார செட்டிவிளையை சேர்ந்த அகஸ்டின் என்பவரின் மகள் அனிதா (25) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் தூத்துக்குடியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அனிதாவுக்கு அவருடைய பெற்றோர் 12 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம், வீட்டுக்கு தேவையான பொருட்களை சீர்வரிசைகளாக கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஜெய்சிங் மனைவி அனிதாவுடன் திருப்பூர் குருவாயூரப்பன்நகரில் தங்கி இருந்து, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் அனிதா இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு ஜெய்சிங் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனிதாவின் அண்ணன் சதீஷ்குமார், தனது தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அனிதாவுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகி உள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் அனிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஜெய்சிங்கை அனுப்பர்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: