திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன.இவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக யாருக்கும் பணி வழங்கப்படவில்லை. ஏற்கனவே பணியாற்றியவர்களுக்கும் சம்பள பாக்கியுள்ளது.

இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பேருந்து கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என எல்லாப் பக்கமும் மக்களை அரசு வாட்டி வதைக்கிறது.முற்றிலும் குடும்பத்தில் வருவாய் ஏதுமில்லாததால் அடுத்து எப்படி வாழ்வது எனத் திணறுகின்றனர்.இந்நிலையில் எதையும் செய்ய முடியாத நிலைக்குக் கொண்டு சென்ற அரசைக் கண்டிக்கும் வகையில் கோபமுற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வியாழனன்று ( பிப்.8) அன்று சோழவரம் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் அருமந்தை, பெருங்காகூர், பூதூர், ஞாயிறு, முல்லைவாயல், ஆங்காடு, விச்சூர், கும்முனூர், திருநிலை, வெள்ளிவாயல் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்த கொண்டனர். பணித்தளத்தில் பந்தல், குடிநீர், மருத்துவ முதலுதவிப் பெட்டி வைக்க வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கி ரூ.400 கூலியாகக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.அப்போது சோழவரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரி கால்வாய்களை நூறு நாள் வேலை மூலம் சீரமைக்கும் பணி தொடரும்,வரும் திங்கள் கிழமை முதல் பணி வழங்கப்படும்,சம்பள பாக்கியை உடனே வழங்கப்படும், விண்ணப்பித்த அனைவரும் வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்படும்,தனி நபர் கழிவறை கட்டினால் தான் வேலை என்பதை கட்டாயப்படுத்தப்படமாட்டாது என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் ஜி.வி.எல்லையன், எம்.வி.நக்கீரன், பி.வி.முனுசாமி,ரவி, கே.முனிவேல்ராஜா,எஸ்.உதயன்,பி.லிங்கம், ஜி.மனோன்மணியம், வி.விஜயகுமார் உட்பட பலர் பேசினர்.

 

Leave A Reply

%d bloggers like this: