மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சொன்னதாக ஒரு கருத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊடக பதிவு அடையாளத்துடன் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாகத் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் இரா.திரிமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் வியாழனன்று (பிப். 8) காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் கடந்த அரை நூற்றாண்டு காலமாக சாதியற்ற மற்றும் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம் உருவாக அரசியல் பணியாற்றி வருகிறார்.மேலும் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் அரங்க நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறார். ஆனால் இதுநாள் வரை சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலொ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகவோ பேசியது கிடையாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கெதிராக அரசியல் கட்சித் தலைவர்கள யாராவது பேசினால் அதற்குத் தகுந்த பதில் அளிப்பார். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்துகளை பல்வேறு தளத்தில் இயங்குகிற சமூகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதியன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாக ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டதாக ஒரு கருத்து தொடர்ச்சியாகச் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கருத்தினை எங்கேயும் எப்போதும் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறவில்லை.

குறிப்பாகக் கட்சியில் குழப்பம் மற்றும் தலைவர்களுக்குள் பிளவு இருப்பது போலவும், மேலும் கட்சிக்குள் சாதிய பிளவு இருப்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தைத் திட்டமிட்டு பரப்புகிற வகையில் மேற்கண்ட பதிவுகள் தொடர்ச்சியாக உள்நோக்கத்தோடு பரப்பப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது கட்சியின் தலைவர்களோ இதுபோன்ற கருத்துகளை ஒருபோதும் கூறியது கிடையாது. அதோடு மட்டுமல்லாமல் தீய நோக்கத்தோடு பரப்பப்படுகிற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர் பிரகாஷ்காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக பொறுப்பில் இருந்தவர். தற்போது தலைமைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீதும் திட்டமிட்டு அவதூறு பரப்ப வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கை உறுதிப்பாட்டுக்கெதிராகவும், எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அரை நூற்றாண்டு கால சமூக மற்றும் அரசியல் பணிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கண்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டே பதிவிடப்பட்டு வருகிறது. எனவே மேற்கண்ட பதிவுகளை உள்நோக்கத்தோடும் தீய எண்ணத்தோடும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதை தடுத்து நிறுத்தவும், பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமூர்த்தி, திட்டமிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் தலைவர்களையும் அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பப்படுகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும். வெளியிடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறை உதவி ஆணையர் சாரங்கனை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட அவர் உடனடியாக சைபர் கிரைம் இணை ஆணையர் இதை உடனடியாக கவனிப்பார் என்றும், பதிவுகள் அனைத்தும் அகற்றப்படும் என உறுதியளித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.