வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வரும் 17 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில், 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு வரை படித்த வேலையில்லாத நபர்கள் பங்கேற்கலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருவோர் தங்களது கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது விவரங்களை www.ncs.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் . பதிவு செய்ய இயலாதவர்கள் பிப்.17 அன்று நேரில் வந்து முகாமிலேயே பதிவு செய்துகொள்ளலாம். பணிக்குத் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.
இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தையச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை, மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.