திருப்பூர், பிப்.8 –
திருப்பூர் பின்னலாடைத் துறையினர் உலகளவில் இணைய வழி வர்த்தகத்திற்கான வாய்ப்பை அதிகரிப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரமாக திருப்பூர் திகழ்ந்து வருகிறது. உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல பகுதிகளுக்கும் அனைத்து விதமான பின்னலாடைகளும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கும் பின்னலாடைகள் அனுப்பப்படுகின்றன. உலக அளவில் வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக ஏஜென்டுகள் மூலம் ஆர்டர்கள் பெற்று இங்கு பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டு கப்பல் அல்லது விமானம் மூலம் அனுப்பப்படுகிறது. அதேபோல் உள்நாட்டுச் சந்தையிலும் சில முன்னணி தயாரிப்பாளர்கள் சொந்த பிராண்ட் மூலம் சந்தைக்கு அனுப்புகின்றனர். வேறு பல நிறுவனங்கள் மொத்த விற்பனையாளர்கள் மூலம் சில்லறை வியாபாரிகளுக்கு அனுப்புகின்றனர்.

மேலும் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இணையவழி சந்தை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விற்பனை தொடர்ந்து சீராக அதிகரித்து வந்தாலும், பெரிய அளவுக்கு விரிவடையவில்லை. இந்நிலையில் திருப்பூரில் புதன்கிழமை அமேசான் நிறுவனத்தின் சார்பில் பிராண்ட் ஆடை தயாரிப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலக அளவில் திருப்பூர் பின்னலாடைகளுக்கு மிகப்பெரும்வரவேற்பு இருக்கிறது. இணையவழிவர்த்தகத்தின் மூலம் இடைநிலை வர்த்தகர்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யலாம் என்பது பற்றி அமேசான் நிறுவனத்தார் விளக்கியுள்ளனர். இணைய வணிகம் மூலம் இந்தியா முழுவதும், வெளிநாடுகளிலும் ஆடைகளை அனுப்புவதில் போக்குவரத்து, இருப்பு வைப்பது உள்ளிட்ட நடைமுறைப் பணிகளை அமேசான் நிறுவனம் பொறுப்
பேற்றுக் கொள்ளும்.

வழக்கமாக சரக்குகளை சந்தைக்கு அனுப்புவதில் மொத்த விற்பனையாளர்கள், சில்லரை வியாபாரிகளுக்கு கமிஷன் தருவது இணையவழி வர்த்தகத்தில் இல்லை. அதற்கு மாறாக அமேசான் உள்ளிட்ட, சம்பந்தப்பட்ட இணையவழி வணிக நிறுவனத்துக்கு ஆடை உற்பத்தியாளர்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகித கமிஷன் தர வேண்டும். எனவே நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்குவதால் நுகர்வோருக்கு விலை குறைய வாய்ப்பு இருக்கும் அதேசமயம், உற்பத்தியாளர்களும் எதிர்பார்த்த லாபம் பெறுவார்கள். ஆனால் இணையவழி வணிகத்தில் பிராண்டுகளின் போட்டி அதிகரிக்கும்போது பொருளின் விலையைக் குறைக்க வேண்டியதும், இணைய வர்த்தக நிறுவனங்கள் தர வேண்டிய கமிஷன் படிப்படியாக அதிகரிக்கின்றனர். அப்போது காலப்போக்கில் ஒற்றை ஆதிக்க இணைய வணிக நிறுவனத்தின் பிடியில் உற்பத்தியாளரும், நுகர்வோரும் கட்டுண்டவர்களாக மாறுவதும் நடைபெறுகிறது. எனினும் தற்போது விரிவடைந்து வரும்புதிய முறை என்ற அளவில் இணைய வணிக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள பின்னலாடை நிறுவனத்தினர் ஆர்வமுடன் அமேசான் நிறுவன நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் மூலம் உடனடி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.