மேட்டுப்பாளையம், பிப். 8-
ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக மீண்டும் வார்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறி காரமடை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக, மார்க்சிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் இதுவரை 18 ஆவது வார்டு பகுதியாக இருந்து வந்த கோடதாசனூரினை தலைமையாக கொண்டு சத்யா நகர், டி.ஜி.புதூர், முல்லை நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் முழுவதுமாக கலைத்து விட்டு, அருகிலுள்ள வேறு வார்டுகளில் இணைக்கபட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வரையறை ஆளும் கட்சியினர் தூண்டுதலில் பேரில் ஒரு சாராருக்கு ஆதரவாக, அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி வியாழனன்று திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் காரமடை பேரூராட்சி அலுவலகத்தை முற்றைகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,அதிகாரிகளின் இந்த போக்கினை கண்டித்து கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டது. இதன்பின்னர் தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் இரண்டாவது முறையாக காரமடை பேரூராட்சியில் வார்டுகளை மாற்றி அமைத்து தங்களுக்கு சாதகமான 18 ஆவது வார்டினை முழுவதுமாக கலைத்துள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகாசிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி பழைய முறைப்படியே வார்டு வரையறை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக காரமடை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக, இப்போராட்டத்தில் திமுக நகர செயலாளர் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.பெருமாள், ராஜலட்சுமி மற்றும் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: