தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ளியன்று (பிப்.9) மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னையில் வியாழனன்று (பிப்.8) முன்னணியின் மாநிலத்தலைவர் ச.மோசஸ், பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2017 பிப்3ம் தேதி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போராட்டத்தின் போது அன்றைய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் சபிதா(ஐஏஎஸ்) தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளைக் கூட தமிழக அரசும் கல்வித்துறையும் இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. புதிய தன்பங்கேற்பு ஓய்கூதியத்திட்டத்தைத் கைவிட்டு, பழைய பயனளிப்பு ஓய்கூதியத் திட்டத்தை நடைமுறை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.லிட் கல்வித்தகுதியுடன் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றபின் தனது கல்வித்தகுதியை உயர்த்தி பிஎட் பயின்று அதற்கான ஊக்க ஊதியம் பெற்று வந்ததைத் தொடக்கக்கல்வி இயக்குநர் தனது செயல்முறை ஆணை மூலம் நிறுத்தி வைத்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். பொது மாறுதலுக்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு கடந்த காலங்களைப் போல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி பதவி உயர்வு வழங்கவேண்டும், கற்பித்தல் பணியைப் பாதிக்கும் வகையில் ஆசிரியர்களைக் கொண்டு புள்ளிவிவரங்களை வலைத்தளத்தில் பதிவு செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் இணைதள வசதியுடன் கணினி வழங்கி அதை இயக்கிடப் பணியாளர்கள் நியமனம் செய்யவேண்டும். மூத்தோர்களின் முதுநிலைக்கு முன்னுரிமை வழங்கிப் பணி நியமனம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் கிடப்பில் உள்ளதால் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
ஜக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஆயத்தக்கூட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளதையொட்டியும் அதன் தலைவர்களின் வேண்டுகோளின் படியும் பிப் 9 அன்று மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களில் தொடக்ககல்வி அலுவலகம் முன்பு ஒருநாள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். சென்னையில் சங்கநிர்வாகிகள் மட்டும் டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாநில நிர்வாகிகள் ச.மயில், சோ.முருகேசன், மூ.மணிமேகலை, அ.ர`ஹீம், சா.சித்ரா, இரா.மலர்விழி, இரா.தமிழ்செல்வி, இ.வின்சென்ட், தோ.ஜான்கிறிஸ்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.