கோவை, பிப்.7-
40 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆவேசமடைந்த கோவை மதுக்கரை பகுதி மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மதுக்கரையடுத்த கண்ணமநாயக்கனூரில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் குழாயில் வரும் தண்ணீரை குடிப்பதற்கும், ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் தண்ணீரை மற்ற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆழ்குழாய் கிணற்று மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் கடந்த நிலையிலும் சரிசெய்யப்படவில்லை. மேலும், குழாயில் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீரும் கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக விநியோகிக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கண்ணமநாய்க்கனூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த மூன்று அரசு பேருந்து மற்றும் ஒரு தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பிறகு வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், மதுக்கரை காவல் ஆய்வாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்போதைக்கு உடனடியாக குடிநீரை லாரிகள் மூலம் வழங்குவதாகவும், இனிமேல் பத்து நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து எவ்வித தடங்கலுமின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனவும் உறுதியளித்தனர். மேலும், பழுதடைந்துள்ள ஆழ்குழாய் மோட்டார் பழுதை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: