திருப்பூர், பிப்.7-
வருவாய்த் துறையில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 – அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் இரு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர்.

வருவாய்த்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து நிலைப் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப புதிய பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் பிப்.7, 8 ஆகிய இரு தினங்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இதர வருவாய்த்துறை அலுவலகங்களில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் முதல் அலுவலக உதவியாளர்கள் வரை உள்ள 315 வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர், துயர்துடைப்பு வட்டாட்சியர் என இருவர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். மேலும், சார் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 11 ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் 29 ஊழியர்கள் என ஒட்டுமொத்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்சார் ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தாளர் என சுமார் 350க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கோவை:
கோவை மாவட்டத்திலுள்ள 10 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதேகோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் துறை ஊழியர்கள் கோரிக்கை விளக்க கூட்டம் நடத்தினர். இதில்திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம்:
இதேபோல், சேலத்தில் 13 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை துவங்கினர். இதில் சுமார் 450க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.