ஈரோடு, பிப்.7-
ஈரோடு அருகே மருந்து விற்பனை பிரதிநிதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு அருகேயுள்ள அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி வனக்கோவிலுக்கு சிலர் பொங்கல் வைப்பதற்காக செவ்வாயன்று காலை சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப் போட்டு பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்தியூர் காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்து கொண்டவர் அந்தியூர் கொல்லம்பாளையத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி சரவணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சரவணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மன் மெடிக்கல்ஸ் உரிமையாளர் முருகன், மூர்த்தி மற்றும் பார்கவி மெடிக்கல்ஸின் உரிமையாளர் ஆகியோர் சரவணனை அழைத்து நீங்கள் மருந்து விற்றதில் ரூ.7 லட்சம் கையாடல் செய்துவிட்டீர்கள். இந்த தொகையை மாதம் ரூ.6 ஆயிரம் என வழங்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட சரவணன், தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, சரவணனின் தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: