கள்ளக்குறிச்சி,
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் மாநிலத் தலைவர் எம்.செந்தில் தலைமையில் நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் முகமது ரியாஸ், மாநிலச் செயலாளர் பாலா, பொருளாளர் தீபா, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக துணைவேந்தர் கைது செய்யப் பட்டுள்ளார். தமிழக வரலாற்றில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

பல்கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிநியமனத்தில் தகுதியானவர்களை நியமனம் செய்வதற்கு பதிலாக பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நியமனங்கள் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துக் கொண்டு இருக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியான பணியிடங்களை நிரப்பிட உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்குவதற்கும் கல்லூரி நிர்வாகம் மூலம் பல லட்சம் வசூலிப்பதாகவும் புகார்கள் உள்ளன. எனவே பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி நியமனங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். முறைகேட்டில் தொடர்புள்ள அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தது மோடி அரசு. ஆனால் ஆட்சிக்கு வந்தப் பின்னர் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பாதது மட்டுமல்ல ஜந்தாண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை ஒழித்துக்கட்ட முயற்சிக்கின்றன. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் சூழலில் மத்திய அரசின் இந்த முயற்சியை வாலிபர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், புதியபணியிடங்களை உருவாக்க வேண்டும்.

ரயில்வே துறையில் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. புதிய இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கு பதிலாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் நியமனம் செய்யவது இளைஞர் விரோத நடவடிக்கையாகும். இதனை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்திலும் சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய கோட்ட ரயில் நிலையங்களில் பிப்.13 அன்று மறியல் போராட்டம் நடத்துவது என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் நினைவு தினம், காதலர் தினத்தை முன்னிட்டு ‘மத நல்லிணக்கம் மக்கள் ஒற்றுமை’ கருத்தரங்கம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

Leave A Reply

%d bloggers like this: